காரைக்கால் அம்பகரத்தூர், நெடுங்காட்டில் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரைக்கால், மே 22: காரைக்கால் அம்பகரத்தூர் மகா மாரியம்மன் கோயில் மற்றும் நெடுங்காடு மனோன்மணி மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் தீமித்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு இத்திருவிழா தொடங்கும் விதத்தில் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் உத்ஸவம் கடந்த 6ம் தேதி இரவு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பத்ரகாளியம்மனுக்கு பூர்வாங்க அபிஷேகம், காப்புக் கட்டுதல் 8ம் தேதி நடைபெற்றது.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மகா மாரியம்மன் கோயில் சார்பில் தீமிதித் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உத்ஸவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேள வாத்தியங்களுடன் தீ குண்டம் அருகே மாலை 6 மணியளவில் எழுந்தருள செய்தனர்.

தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர், வானவேடிக்கை நிகழ்ச்சியும், மகா மாரியம்மன் வீதியுலா புறப்பாடும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 27ம் தேதி புஷ்ப பல்லாக்கும், 28ம் தேதி மகிஷ சம்ஹார நினைவு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.  விழா ஏற்பாடுகளை கலெக்டர் விக்ராந்த்ராஜா, நிர்வாக அதிகாரி சுந்தர் தலைமையில் கோயில் அறங்காவல் குழு தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் ராமலிங்கம், செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் காமராஜ், உறுப்பினர் அய்யாசாமி மற்றும் பலர் சிறப்பாக செய்து வருகின்றனர். அதேபோல், காரைக்கால் நெடுங்காடு மனோன்மணி மாரியம்மன் கோயில் தீமித்திருவிழா நேற்று முன்தினம்  மாலை சிறப்பாக நடைபெற்றது. விழாவில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 24ம் தேதி இரவு அம்மன் தெப்பத்திருவிழா மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோயில் அறங்காவல் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Related Stories: