மயிலாடுதுறை நகரில் சுகாதாரக்கேட்டை பரப்பும் பாதாள சாக்கடை விரைவில் சீரமைக்கப்படுமா?

மயிலாடுதுறை, மே 22: மயிலாடுதுறையில் சுகாதார கேட்டை பரப்பும் பாதாள சாக்கடையை விரைவில் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடைப்பணிகள் முடிவடைந்து தனியார் பாராமரிப்பில் இயங்கி வந்தது. பல்வேறு பிரச்னைகளை சந்தித்ததாலும், நகராட்சிக்கு தொடர்ந்து கெட்டப்பெயர் ஏற்படுத்தி வந்ததாலும் இந்த ஆண்டு  பழைய ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டு புதிய ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 3 மாதமாகியும் பாதாள சாக்கடைபராமரிப்பு பணி அவ்வளவு திருப்தியாக இல்லை. ஏற்கனவே பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டியிலிருந்து சாக்கடைக் கழிவுகள் வெளியேறி வந்த நிலையே மீண்டும் தொடர்கிறது.  நகராட்சியிடம் புகார் அளித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக திருஇந்தளூர் சிவன்கோயிலை ஒட்டியுள்ள பகுயிலிருந்து கழிப்பறைநீர் மயிலாடுதுறை மணல்மேடு சாலையில் வழிந்து சாலை ஓரத்தில் உள்ள காலி இடத்தில் தேங்கி நிறைகிறது.

கடந்த ஒரு மாதகாலமாக சாக்கடை வழிவது நின்றபாடில்லை. அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தால் அன்று மட்டும் ஓடாது, அடுத்த நாளிலிருந்து ஓட ஆரம்பித்துவிடும். இதனால் புகார் சொல்வதை மக்கள் விட்டுவிட்டனர். அந்த வழியே நடந்து செல்வோர் மிகவும் சங்கடத்திற்குள்ளாகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாக்கடைநீர் நடந்து செல்வோர்மீது பட்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. பள்ளிக்கூடம் திறக்க இருக்கிற நேரத்தில் நூற்றுக்கணக்கான ஏழை. எளிய மாணவர்கள் அப்பகுதி வழியே நடந்துசெல்லும் போது துர்நாற்றத்துடன் பள்ளிக்கு செல்லும் அவல நிலை ஏற்படும். மயிலாடுதுறை நகராட்சி துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிப்பறை நீரை சாலையில் விடாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: