நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மக்கள் நலத்திட்ட பணிகள் முடக்கம்

குன்றத்தூர், மே 22: குன்றத்தூர் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் முடங்கி கிடக்கின்றன. குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. குன்றத்தூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால் குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மற்றும் கட்டிட வரையாளர் முறையாக பணிக்கு வருவதில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் பொதுமக்கள், கட்டிட வரைபட அனுமதி உள்பட பல்வேறு பணிகளை பெற முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குன்றத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கிறோம். அரசுக்கு பெருமளவு வருவாய் ஈட்டும் அளவில் குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகம் உள்ளது. ஆனால் பேரூராட்சி அலுவலகத்துக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லை.

தற்போது உள்ள செயல் அலுவலர் வெங்கடேஷின் வீடு, சிட்லபாக்கத்தில் உள்ளது. இதனால், அவர் கூடுதலாக சிட்லபாக்கம் பேரூராட்சி அலுவலகத்திலும் பொறுப்பை கவனிக்கிறார். இதனால் அவர் குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு பெரும்பாலும் வருவதில்லை. மாதத்தில் 2 முறை மட்டுமே வருகிறார். அதேபோல், கட்டிட வரையாளரும் வாரத்தில் வியாழக்கிழமை மட்டுமே வருகிறார். இதனால், பல்வேறு பணிகளுக்காக குன்றத்தூர் பேரூராட்சியில் பல நாட்கள் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, குன்றத்தூர் பேரூராட்சியில் தரகர் தொல்லையும் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்கவும், பொதுமக்களின் சிரமத்தை போக்கவும் நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: