தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் 30 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை

சென்னை, மே 22: வாக்கு எண்ணிக்கை தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் மற்றும் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்கின்றனர். தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் 30 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகளுக்கான பொது தேர்தல்  மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை எண்ணப்படுகின்றன.

அதன்படி வட சென்னை மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதிக்கு லயோலோ கல்லூரியிலும், தென் சென்னை தொகுதிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த 3 மையங்களுக்கும் துணை ராணுவம் மற்றும் மாநில காவல் துறையினர் அடங்கிய 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதிரி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் இந்த மையத்தை பார்வையிட்டனர். இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை பணியில் மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த 1800 அதிகாரிகள் ஈடுபடுத்தபட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதல் கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இன்று 2ம் கட்ட பயிற்சி வழங்கப்படுகிறது.  சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 18 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளன. இதில் 17 தொகுதிகளில் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 30 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவி பேட் இயந்திரங்கள் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் மொத்தம் 95 வாக்குச்சாவடிகளில் பதிவான விவிபேட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும். இந்த பணி முடிந்து முடிவுகள் அறிவிக்க இரவு 9 மணி ஆகும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் மற்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்கின்றனர்.

Related Stories: