மாடுகள் கடத்துவதை தடுத்த டீக்கடை உரிமையாளர் வேன் ஏற்றி படுகொலை வாலாஜா அருகே நள்ளிரவு பயங்கரம்

வாலாஜா, மே 22: வாலாஜா அருகே மாடுகள் கடத்துவதை தடுத்த டீக்கடை உரிமையாளரை, கடத்தல் கும்பல் வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாலாஜா சீனிவாசன் ெதருவை சேர்ந்தவர் கோட்டி என்ற கோடீஸ்வரன்(38). வாலாஜா அரசு ெபண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுடன் கோடீஸ்வரனின் தந்தை ராமலிங்கமும்(65) வசித்து வருகிறார். மேலும், கோடீஸ்வரன் மாடு வளர்த்து வருகிறார். இவரது மாடு மற்றும் அதே பகுதியை சேர்ந்த பலரது மாடுகள் பஜார் உட்பட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரியும். இரவு நேரத்தில் திரவுபதி அம்மன் கோயில் மற்றும் சீனிவாசன் ெதருவில் உள்ள மைதானத்தில் படுத்திருக்கும்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் திரவுபதி அம்மன் கோயில் அருகே படுத்திருந்த மாடுகளை சிலர், வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த சில பெண்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அதே பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், கோடீஸ்வரனுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார்.  இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விரைந்து வந்தார். அதற்குள் 4 மாடுகளை ஏற்றிக்கொண்டு வேன் அங்கிருந்து வேகமாக சென்றது. இதையடுத்து கோடீஸ்வரனும், சுரேசும் ஒரே பைக்கில் வேனை விரட்டி சென்றனர். இருப்பினும் வேன் வேகமாக சென்றது. இதனால், இருவரும் குறுக்கு வழியாக சென்று வாலாஜா தேரடி பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு வேனை நிறுத்த முயன்றனர்.  அப்போதும் வேன் வேகமாக வருவதை பார்த்த கோடீஸ்வரன், வேன் மீது கற்களை எடுத்து எறிந்தாராம். இதை பார்த்த வேன் டிரைவர் கோடீஸ்வரன் மீது வேனை ஏற்றிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதில் கோடீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே சுரேஷ், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ஒரு ஆட்டோவில் கோடீஸ்வரனை ஏற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வேனை துரத்தி சென்றனர். ஆனால், அந்த கும்பல் தப்பி சென்றது. இதற்கிடையே கோடீஸ்வரன் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி கலையரசன், வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிந்து திரவுபதி அம்மன் கோயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில், மாடுகளை கடத்தி சென்ற வேனில் நம்பர் பிளேட் இல்லாததும், இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் மாடுகளை திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இதேபோல் மாடுகளை சிலர் கடத்தி சென்றனர். பள்ளிகொண்டா வரை துரத்தி சென்றோம். ஆனால், அவர்களை பிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.  இதனால், தற்போது ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொள்ளை கும்பல் பெரிய அளவில் நெட்வொர்க் அமைத்து மாடுகளை திருடி செல்கின்றனர். முதலில் நோட்டமிட்டு, பின்னர் இரவு நேரத்தில் மாடுகளை கடத்தி செல்கின்றனர். கடத்துவதற்கு முன்பாக மாடுகளுக்கு ஊசி போட்டு விடுகின்றனர்.

இதனால், மாடுகளும் கத்துவது இல்லை. மாடுகளை ஏற்றிச்செல்லும் வேனுக்கு முன்பாக ஒருவர் பைக்கில் சென்றவாறு, வேனில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுக்கிறார். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  மாடுகள் கடத்துவதை தடுக்க முயன்றவரை வேன் ஏற்றிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: