14 மேஜைகள் வரை போட தேர்தல் ஆணையம் அனுமதி ேகாணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேஜைகள் குறைப்பு

நாகர்கோவில், மே 22:  மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தில் சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் போட்டு வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் ெதரிவித்துள்ள போதிலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 10, 12 என்று மேஜைகள் என எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து நாளை (23ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த முறை சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து வீதம் விவி பேட்களில் பதிவாகி விழுந்த சீட்டுகளையும் எண்ணி சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 5 வீதம் 30 விவிபேட்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளது. இவை தவிர மாதிரி வாக்குபதிவு நடைபெற்றபோது பதிவான வாக்குகளை அழிக்காத மூன்று மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் இம்முறை எண்ணப்படாது.

அதற்கு பதிலாக அதனுடன் பொருத்தப்பட்டிருந்த விவிபேட்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அந்த வகையில் மேலும் 3 விவிபேட்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அந்த வகையில் மொத்தம் 33 விவிபேட்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. முதலில் தபால் வாக்கு, அதன் பின்னர் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், தொடர்ந்து விவிபேட்களில் பதிவான வாக்குகள் என்று எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும். சாதாரணமாக மாலை வரை நீடிக்கின்ற வாக்கு எண்ணிக்கை இந்த முறை விவி பேட்களில் பதிவான வாக்குகளையும் எண்ணி முடித்து சரிபார்த்த பிறகே வெற்றி வேட்பாளர் பற்றிய முடிவை அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் வெற்றி பெற்றவர் யார் என்பதை அறிவிக்க காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அதே வேளையில் தேர்தல் ஆணையம் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையம் ஒவ்வொன்றுக்கும் 14 மேஜைகளும், மத்திய மேஜை ஒன்றும் கொண்டதாக வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான அறை மிக பெரியதாக மொத்தம் 15 மேஜைகளும் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அமருவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் கோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கன்னியாகுமரி, குளச்சல் சட்டமன்ற தொகுதிகளுக்கு 12 மேஜைகளும், இதர நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு தலா 10 மேஜைகளும் வாக்கு எண்ணிக்கைக்காக போடப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார். இதனால் ஒரு சுற்றில் மொத்தம் 64 மின்னணு இயந்திரங்களில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது போன்று அதிகபட்சமான 14 மேஜைகளுடன் வாக்கு எண்ணிக்கைக்கான மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் ஒரு சுற்றில் மொத்தம் 84 மேஜைகளில் 84 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஒரு சுற்றுக்கு 20 மின்னணு இயந்திரங்கள் கூடுதலாக எண்ணப்படும், 28 சுற்றுகள் எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறப்படுகிறது.

மேலும் கோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதிய இட வசதிகள் இருந்தபோதிலும் அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசிக்காமல் இருந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முறை விவிபேட்களிலும் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் இதனால் ஏற்படும் கால தாமதத்தை கருத்தில்கொண்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உரிய முன்னேற்பாடு பணிகளை செய்திருந்தால் தேர்தல் முடிவுகளும் காலதாமதமின்றி முன்கூட்டியே அறிவிக்க வாய்ப்பாக அமைந்திருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகள் முடிய வேண்டும் என்பதற்காக இவ்வாறு மேஜைகள் போடப்பட்டுள்ளது. 14 மேஜைகள் போட்டால் 4 தொகுதிகளில் சுற்றுகள் எண்ணிக்கை குறையும். முன்னதாகவே வாக்கு எண்ணிக்கை பணிகள் முடிந்துவிடும். இதர 2 தொகுதிகளில் சுற்றுகள் அதிகம் ஆகும். தேர்தல் ஆணையம் குறைந்தபட்சம் 10 மேஜைகள், அதிகபட்சம் 14 மேஜைகள் வரை போடலாம் என்று தெரிவித்துள்ளது’ என்றார்.

வாக்கு எண்ணிக்கை முகவருக்கான பணிகள் என்ன?

* வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒரு மேஜைக்கு ஒரு முகவர், தபால் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு முகவர், முதன்மை வாக்கு எண்ணிக்கை முகவர் என்று ஒரு சட்டமன்ற தொகுதி வாரியாக முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முகவர்களாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் நியமிக்க முடியாது.

* முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்து அமர வேண்டும். முகவர்கள் நியமன கடிதம், முகவருக்கான போட்டோ அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை.

* வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்பு வேட்பாளரோ, தலைமை முகவரோ, மைய மேஜை வாக்கு எண்ணிக்கை முகவரோ வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு தேர்தல் அலுவலர்களோடு சென்று அதனை திறக்கும்போது உடனிருக்கலாம். பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள முத்திரைகள், பூட்டுகள் சேதப்படுத்தப்படாமல் உள்ளதா என்பதை கவனிக்கலாம். அவ்வாறு சேதப்படுத்தப்பட்டிருந்தால் அதற்கான புகார் பதிவு செய்வதுடன் முறையாக விசாரித்த பின்னர் அறையை திறக்க அனுமதிக்கலாம்.

* வாக்கு எண்ணிக்கை மேஜைக்கு கொண்டுவரப்படும் வாக்கு கட்டுப்பாட்டு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள் ஒரு 17சி படிவம் இருக்கும். இதன் விபரத்தை முகவர்கள் பதிவு செய்துகொள்வதுடன் முகவர் தான் கொண்டு சென்ற படிவம் 17 சி நகலில் உள்ள அனைத்து விபரங்களும் வாக்கு எண்ணிக்கை அதிகாரி காட்டிய படிவம் 17சி-ல் குறிப்பிடப்பட்டுள்ளது ஒத்துப்போகிறதா என்பதை சரிபார்க்கலாம்.

* கட்டுப்பாட்டு இயந்திரத்தின் வரிசை எண், அதில் உள்ள முத்திரைதாள் வரிசை எண், பிங்க் பேப்பர் சீல் வரிசை எண், வாக்கு சாவடி எண் ஆகியவை முகவர்கள் கொண்டு சென்றுள்ள 17 சி படிவத்தில் உள்ள விபரத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

* வாக்கு இயந்திரத்தில் உள்ள முத்திரைகள் சிதைக்கப்படாமல் இருத்தல், அதில் உள்ள பேப்பர் முத்திரை, கட்டுப்பாட்டு இயந்திரத்தின் திறக்கும் பகுதியை நூலால் இணைத்து கட்டியுள்ள சிறப்பு முத்திரை, பச்சை நிற தாள் முத்திரை ஆகியவை முறையாக உள்ளதா என்பதை சரிபார்க்கலாம். இவை சரிபார்த்த பின்னர் மின்னணு இயந்திர கட்டுப்பாட்டு கருவியை இயக்கி முடிவு 1 என்ற பட்டனை அலுவலர் அழுத்தியதும் வரிசையாக ஒவ்வொரு வேட்பாளருக்காக பதிவான வாக்குகள் மற்றும் மொத்தமாக பதிவான வாக்குகள் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் தெரியும்.

Related Stories: