நாகர்கோவிலில் தாய், மகள் விபத்தில் பலி போலீஸ் தேடிய கார் உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்

நாகர்கோவில், மே 22:  நாகர்கோவிலில் தாய், மகள் பலியான விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த கார் உரிமையாளர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நாகர்கோவில் அருகே உள்ள மேலசங்கரன்குழி பகுதியை சேர்ந்தவர் நாககிருஷ்ணமணி (49). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி சுதா (42). இவர்களது மகள் பத்மபிரியா (16). கடந்த 15ம் தேதி நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  பத்மபிரியாவை 11ம் வகுப்பில் சேர்ப்பதற்காக தனது மகள் மற்றும் மனைவியுடன் பைக்கில் நாககிருஷ்ணமணி நாகர்கோவில் வந்தார். பள்ளி அருகே பைக்கில் சென்று கொண்டு இருந்த போது ரோட்டோரத்தில் நின்ற கார் ஒன்றின் டிரைவர் வேகமாக காரின் முன்பக்க கதவை திறந்தார். இதில் கார் கதவு பைக்கில் இடித்து நாககிருஷ்ணமணி, சுதா,  பத்மபிரியா ஆகிய மூன்று பேரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்துக் ெகாண்டிருந்த மினிபஸ் அவர்கள் மீது மோதியது. படுகாயம் அடைந்த மூவரையும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சுதா, பத்மபிரியா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். நாககிருஷ்ணமணி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாய், மகள் விபத்தில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கார் டிரைவர் மற்றும் மினி பஸ் டிரைவர் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட காரில் இருந்தவர், காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கும் சென்றார். இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கார் பதிவு எண் சிக்கியது. சென்னை பதிவு எண் கொண்ட கார் என்பது தெரிய வந்தது. அதன் முகவரியும் சென்னை முகவரியாக இருந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், காஞ்சிபுரம் பள்ளிக்கரணையை சேர்ந்த ராஜன் (38) என்பவர் நேற்று இந்த விபத்து தொடர்பாக நாகர்கோவில் ஜே.எம். 1வது நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் திக்கணங்கோடு ஆகும். கடந்த வாரம் ஊருக்கு வந்திருந்த அவர் பொருட்கள் வாங்குவதற்காக காரில் நாகர்கோவில் வந்துள்ளார். அந்த சமயத்தில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இது பற்றி ராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: