கோடை மழை கைவிட்டதால் நாகர்கோவிலில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

நாகர்கோவில், மே 22:  நாகர்கோவில் மாநகராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீர் தேவைக்காக 1942ல் பூதப்பாண்டி அருகே முக்கடலில்   திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் உத்தரவின்படி அணை கட்டப்பட்டது. மைனஸ் மட்டத்தில் 24 அடியும், பிளஸ் மட்டத்தில் 25 அடியும் கொள்ளவு கொண்ட இந்த குடிநீர் தேக்க அணை 30 ஆயிரம் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது. முக்கடல் அணையிலிருந்து  கிருஷ்ணன்கோயில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 400 மி.மீ சுற்றளவு கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சுத்திகரிக்கப்பட்டு, 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. நாகர்கோவில் நகராட்சி மட்டுமின்றி 9 வழியோர கிராமங்கள் சுத்திகரிக்கப்படாத குடிநீர் பெற்று வருகின்றன. தேரூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, தேரூர், சுசீந்திரம், கன்னியாகுமரி பேரூராட்சிகள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பெற்றன. மக்கள் தொகை  அதிகரிப்பு காரணமாக நாகர்கோவிலில் குடிநீர் விநியோகிக்க சுழற்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது.

எனினும்  தட்டுப்பாடு நிலவியதால் கடந்த 12 ஆண்டுகளாக பாசன கால்வாயான அனந்தனாறு கால்வாயில் இருந்து முக்கடலுக்கு நீரேற்றம் செய்யப்பட்டு   வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நாகர்கோவில் மாநகராட்சியின்  தினசரி  குடிநீர் தேவை 23 எம்.எல்.டி ஆகும்.  2,010 பொது குடிநீர் நல்லி இணைப்புகள்,  48,477 வீட்டு குடிநீர்  இணைப்புகள் மூலம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 848 பேர் பயன் பெறுகின்றனர். இதுதவிர  823 ஆழ்துளை கிணறுகள் மூலம் தினசரி 2 எம்.எல்.டி தண்ணீர் பெறப்படுகிறது.  இதன் மூலம் 35,466 பேர் பயன் பெறுகின்றனர்.  இந்த தண்ணீர் 11 மேல் நிலை  தேக்க தொட்டிகள் மூலம் 11 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. முன்பு  தாழ்வான பகுதியில் தினசரியும், சமமான  பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு ஒரு  முறையும், மேடான பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 2011க்கு பின்னர் படிப்படியாக புதிய குழாய்கள்  அமைக்கப்பட்டு, அனைத்து பகுதிகளுக்கும் 5 நாட்களுக்கு ஒரு முறை சீரான  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒராண்டாக   குடிநீர் விநியோகம் 10 நாட்கள் வரை ஆனது.  கோடைமழை கைவிட்டதால், முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 18 அடியாக உள்ளது. இதனால், நீரின் அழுத்தம் குறைந்துள்ளது.

தற்போது முக்கடல் அணை மட்டுமின்றி, பேச்சிப்பாறை  மற்றும் பெருஞ்சாணி அணைகளிலிருந்து 150 கனஅடி தண்ணீரை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்து குடிநீருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். எனினும் தினசரி தேவையில் பாதி அளவே கிடைப்பதால், 15 நாட்களுக்கு ஒரு முறையே தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையில் நீர்மட்டம் குறைந்து, நுண் பூச்சிகளுடன் கலங்கலான தண்ணீர் வருகிறது. அனந்தனாறு கால்வாயிலும்,  குளிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவதால், தண்ணீரை கொதிக்க வைத்து  குடிக்க மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள்:  குடிப்பதற்கு  பயன்படும் குடிநீரை இதர அனைத்து தேவைகளுக்கும் ராட்சத  தரைமட்ட தொட்டிகள்  மற்றும் மேல்நிலை தொட்டிகளில் தேக்கி வைத்து பயன்படுத்துவதே தட்டுப்பாட்டுக்கு காரணம் எனக்   கூறப்படுகிறது. தனி வீடுகள் மட்டுமின்றி அடுக்குமாடி  குடியிருப்புகளில் குறைந்தது 5 ஆயிரம் லிட்டர் பிடிக்கும் வகையில் தரைமட்ட  நீர்தேக்க தொட்டிகள் அமைத்துள்ளனர். தண்ணீர் வரும்போது முதலில் இந்த  தரைமட்ட தொட்டிகளில்தான் பாயும்.

இதனை வீடுகளில் மோட்டார் மூலம் மேல்நிலை  தொட்டிக்கு ஏற்றி விடுகின்றனர். அவ்வாறு ஏற்றப்படும் தண்ணீரையும், துணி துவைப்பது, வீடு கழுவுவது என காலி செய்து மீண்டும், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏற்றப்படுகிறது. இவ்வாறு  கழிவறை மற்றும்  குளியலறை என அனைத்து தேவைகளுக்கும் குடிநீரை பயன்படுத்துவதால்,  தரைமட்ட தொட்டிகள் இல்லாத வீடுகளுக்கு மிகவும் சிறிது நேரம் மட்டுமே குடிநீர்  கிடைக்கிறது.  இதனால் சமச்சீரான குடிநீர் விநியோகம் அனைவருக்கும் கிடைக்காததுடன், குடிக்க பயன்படும் குடிநீர் வீணாக்கப்படுகிறது. போதுமான தண்ணீர் கிடைக்க தற்போது தண்ணீர் கிடைக்காத வீடுகளிலும் தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் அமைத்து வருகின்றனர்.

எனவே  நாகர்கோவில் நகருக்கு குடிநீர் ஆதாரம் கிடைக்காத நிலையில், இதுபோன்ற  முறையற்ற வகையில் வீணாகும் குடிநீர் விநியோகத்தை அதிரடியாக பாரபட்சமின்றி  அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து முறைப்படுத்தினால் கோடையிலும் தட்டுபாடே  இன்றி இரு நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீரை விநியோகிக்க முடியும் என சமூக  ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்று தண்ணீர்

கோணம், ஹவுசிங் போர்டு, சரக்கல்விளை, டிவிடி காலனி, பீச்ரோடு, எறும்புக்காடு, சூரங்குடி போன்ற 19, 36, 37, 49, 48 ஆகிய வார்டு  பகுதிகளில் ஆழ்துளை கிணற்று தண்ணீரே வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் புதியதாக இணைந்த பெருவிளை, ஆசாரிப்பள்ளம், கரியமாணிக்கபுரம் பகுதிகளிலும் அதாவது 20, 21, 23, 24 வார்டுகள் ஆழ்துளை கிணற்று தண்ணீரையே பெறுகின்றன.

புத்தன் திட்டம் வரும்போது சீராகும்

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் ேகட்டபோது, முக்கடல் அணையில் மைனஸ் 18 அடி தண்ணீர் உள்ளது. ஆனால், 10 அடிக்கு சேறாக காணப்படுகிறது. எனவே 8 அடி தண்ணீரில் அழுத்தம் இன்றி தண்ணீர் வேகம் குறைந்து வருகிறது.  முக்கடல் மற்றும் மார்த்தால் பகுதிகளில் அனந்தானறு தண்ணீரை பெற்று வருகிறோம். எனினும், இதில் நமது தேவையான 23 மி.எல்.டிக்கு பதில் 10 முதல் 12 எம்.எல்.டி வரையே கிடைக்கிறது. மேட்டுப்பகுதிகளில்  பல வீடுகளில் தண்ணீர் சென்றடைய நேரம் ஆகிறது. எனவே அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நீண்ட நேரம் குடிநீர் வழங்குகிறோம். இதனால் 15 நாட்கள் ஆகிவிடுகிறது. மழை பெய்து அணையில் தண்ணீர் பெருகினால், இந்த நிலை மாறும். புத்தன்அணை திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, தினசரி குடிநீர் கிடைக்கும்.

Related Stories: