கோயில் திருவிழாவில் அக்னிகுண்டம் அமைக்க தீயணைப்புத்துறை கட்டுப்பாடு

தேனி, மே 21: தேனி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்களின் போது, பூக்குழி இறங்க அக்னிகுண்டம் வளர்ப்பார்கள். இதன் நீளம், அகலம் குறிப்பிட்ட அளவிற்குள் இருக்க வேண்டும் என தீயணைப்புத்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது குறித்து தேனி தீயணைப்புத்துறையினர் கூறியதாவது: சித்திரை, வைகாசி மாதங்கள் மட்டுமின்றி அத்தனை தமிழ் மாதங்களிலும் குறிப்பிட்ட முகூர்த்த நாட்களில் இந்து கோயில்களில் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலும் அம்மன் கோயில் விழா என்றாலே பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது முக்கிய நிகழ்வாக உள்ளது. இந்த பூக்குழி மிகவும் நீளம், அகலமாக அமைக்கப்பட்டு வந்தது. இதனால் மிகவும் அருளுடன் தன் நினைவு இல்லாமல் பூக்குழிக்குள் சாமி ஆடிக்கொண்டே இறங்குபவர்கள் சில நேரங்களில் தடுமாறி விழுந்து விடுகின்றனர்.

அக்னி குண்டம் அகலமாக இருப்பதால் இவர்களது முழு உடலும் அக்னி குண்டத்திற்குள் விழுந்து விடுகிறது. இவர்களை மீட்க செல்பவர்களும் அக்னி குண்டத்திற்குள் இறங்கியே மீட்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, அக்னி குண்டம் 3 அடி அகலம், 15 அடி நீளத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூக்குழி இறங்குபவர்கள் தடுமாறினாலும், அவர்களது உடல் தரையில் தான் விழும். மீட்பதும் எளிது.

இந்துமத உணர்வுகள் புண்படாமல், பக்தர்களின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் இந்த அறிவுரையினை வழங்கி உள்ளனர். இனிமேல் இந்த அடிப்படையில் தான் பூக்குழி அமைக்கப்பட வேண்டும் என விழாவிற்கு அனுமதி வழங்கும் போதே போலீசார் நிபந்தனைகளை விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்முறையாக தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழாவிலும் இந்த புதிய நடைமுறைப்படியே பூக்குழி அமைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: