முத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகில் மாதக்கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

முத்துப்பேட்டை, மே 21: முத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகில் மாதக்கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளி வாசல் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் பள்ளிவாசல் மதரஸா பின்புறம் கோரையாறு கரை முன் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. முன்பு வாரத்தில் ஒருநாள் இப்பகுதியை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்து வந்த நிலையில் தற்போது மாதக்கணக்கில் மாறி அதுவும் வருடக்கணக்கில் தான் சுத்தம் செய்யும் நிலைமை உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர் நாற்றம் வீசி வருகிறது.

மேலும் இதிலிருந்து தொற்றுநோய்களும் பரவி வருவதுடன் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களை துன்புறுத்தி வருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை எடுத்து சென்றும் குப்பைகளை அகற்ற முன்வரவில்லை. இதனால் நாளுக்குநாள் அதிகளவில் குப்பைகள், கழிவுகள் அதிகமாகி மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ரமலான் மாதம் துவங்கியதால் 24 மணி நேரமும் பள்ளி வாசல் மற்றும் மதரசாக்களில் இஸ்லாமியர்கள் அதிகளவில் கூடி வருவதால் அவர்கள் இந்த குப்பை குவியலை கண்டு முகம் சுழித்து வருகின்றனர்.

அதனால் இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் இப்பகுதி மக்களின் நலன்கருதியும் பள்ளி வாசலுக்கு வரும் மக்களின் நலன் கருதியும் உடன் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாட்சா கூறுகையில், குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய்கள் பரவி வருவதுடன் இப்பகுதி மக்கள் குடியிருக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு வரும் மக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு வந்து செல்கின்றனர். அதேபோல் நீண்டநேரம் பிரார்த்தனையில் ஈடுபடும் மக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது இதுகுறித்து பலமுறை பேரூராட்சியில் நேரடியாக சென்று புகார் தெரிவித்தும் குப்பைகளை அகற்றவில்லை. இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் உடன் குப்பை குவியலை அகற்ற வேண்டும். இல்லையேல் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Related Stories: