கரூர் மாவட்டத்தில் 50 கிராமங்களில் கோயில் திருவிழா

கரூர், மே21: கரூர் மாவட்டம் முழுதும் 50க்கும் மேற்பட்ட கிராமக் கோயில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் சித்திரை மாதம் முதல் வைகாசி மாதம் வரை இரண்டு மாத காலம் அனைத்து கிராமங்களிலும் கிராம கோயில் விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருவது வழக்கம்.இதனடிப்படையில், கரூர், வெங்கமேடு, வாங்கல், வேலாயுதம்பாளையம், தென்னிலை, க.பரமத்தி, சின்னதாராபுரம், சிந்தாமணிபட்டி, குளித்தலை, தோகைமலை, மாயனூர், லாலாப்பேட்டை, அரவக்குறிச்சி போன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோயில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோயில் விழா காரணமாக, பிராய்லர் கோழிக்கறியின் விலை ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், சந்தைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்படும், நாட்டுக்கோழி, மற்றும் ஆடுகளின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

கிராம கோயில்களில் மூன்றாவது நாளில், அசைவம் சமைக்கப்படும் என்பதால் அசைவ அயிட்டங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த கோயில் விழாக்கள் முடிவடைந்ததும், கரூர் மாரியம்மன் கோயில் விழாவின் முக்கிய விழாவான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிராமக் கோயில் விழா  மற்ற மாவட்டங்களுக்கு நிகராக கரூர் மாவட்டத்திலும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், இந்த விழாக்களில், மழை, பொதுநலன், விவசாயம் போன்றவை செழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் விழாக்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: