டெல்டா மாவட்டத்தில் ரசாயன களைக் கொல்லியால் அழிந்து வரும் நண்டு, நத்தைகள்விவசாயிகள் வேதனை

டெல்டா மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல் வயல்கள், வரப்புகளில் உள்ள ஏராளமான துளைகளில் நண்டும், நத்தையும் வாழும். மழை பெய்யும் சத்தத்தை கேட்டாலே இந்த நண்டும், நத்தைகளும் துளையை விட்டு வெளியே வந்து அங்கு மிங்கும் விளையாடும். களிமண்ணில் நண்டுகளின் கால் தடங்களை பார்க்கும் விவசாயிகள் மழையின் அறிகுறி என விவசாயப்பணியை தொடங்க தயாராவார்கள். கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் இந்த வயல் நண்டுகளை பிடித்து சமைத்து சாப்பிட்டு வந்தனர். அதே போல் நத்தையும் மூலம் மற்றும் உடல் சூட்டினை குறைக்கும் மருத்துவ குணம் உள்ளதால் அதனையும் பிடித்து சமைத்து சாப்பிடுவார்கள். வயல் வரப்புகளில் முன்பெல்லாம் அதிகளவு காணப்பட்ட இந்த நண்டுகளும், நத்தைகளையும் தற்போது பார்ப்பதற்கே அரிதாகியுள்ளது. வரப்புகளில் உள்ள செடி, கொடிகளை ஆட்களை கொண்டு வெட்டி எடுத்து வயலில் போடுவார்கள்.  பின்னர் அதனை உழுது, எருவாக்குவார்கள். இதனால் வரப்புகளில் உள்ள நண்டு, நத்தைகள் பூமியின் ஆழத்திற்கு சென்று விட்டு, வயல் சாகுபடி செய்யும் போது மீண்டும் வரப்புகளின் மேல் வந்து வாழும்.

ஆனால் விவசாயத்திற்கு போதுமான ஆட்கள் இல்லாததாலும், வரப்புகளில் உள்ள செடி,கொடிகள் மற்றும் களைகளை அகற்ற அதிக விஷத்தன்மை கொண்ட ரசாயன களை கொல்லிகளை தெளிப்பதால், வரப்புகளில் உள்ள செடி, கொடிகள் மற்றும் களைகள் சாவதை விட, வரப்புகளில் உள்ள நண்டும்,நத்தைகளும் இறந்து அழிந்து வருகிறது. இது குறித்து விவசாயி பஞ்சாமிகேசன் கூறுகையில், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வயல்களில் நண்டுகள், நத்தைகள் அதிகமாக இருந்தது. ஆனால் விவசாய கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறையின் காரண மாக விவசாயிகள் வயலுக்கு என்றைக்கு களைக் கொல்லி என்ற பூச்சி மருந்தை தெளிக்க ஆரம்பித்தார்களோ, அன்று முதல்  நண்டும் நத்தையும் அழிந்து வருகிறது. மகசூல் பெருக வேண்டும் என்பதற்காகவும், நெல், பருத்தி, உளுந்து வயல்களில் களைச் செடிகள் அதிகம் முளைத்துவிடும் என்பதற்காக களைகளை கட்டுப் படுத் திட களைக் கொல்லியை விவசாயிகள் தெளிக்க தொடங்கினர். இந்த மருந்தின் ரசாயனத்தன்மையால் வயல் வரப்புகளில் வசித்த நண்டுகள், நத்தை யினங்கள் அழிந்து வருகிறது. அதே போல் வயலுக்கு தெளிக்கும் ரசாயன உரங் களாலும் நண்டும், நத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைவிட்டு செல்கிறது. சாப்பிடுவதற்கு கடல் நண்டுகளை விட  வயல் நண்டுகளுக்கு தான் கிராமங்களில் அதிக மவுசு உண்டு என்றார்.

இது குறித்து இயற்கை விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில்,

வயலில் ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லிகளும் தெளித்ததால் வயலில் உள்ள தண்ணீர் விசமாக மாறிவிடுகிறது. இதனால் தவளை போன்ற பூச்சிகள் வயலில் வாழ்வதில்லை. முன்பெல்லாம் வயிலில் கொசுக்கள் அதிமாக இருக்கும், பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தியதன் விளைவு கொசுக்கள் தற்போது தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு மனிதர்கள் வசிக்கும் வீடுகளுக்கு வந்துவிட்டது. வயலில் உள்ள தண்ணீரில் மீன்கள் முதல் நண்டு, நத்தைகள் என அனைத்தும் வசித்து வந்தது. வயலுக்கு தெளிக்கப்பட்ட ரசாயனத்தால் மண்ணும் ரசாயனமாக மாறிவிட்டது. மண்ணில் ஊர்ந்து செல்லகூடிய நண்டும், நத்தையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ரசாயனத்தை குறைத்தால் மண் வளம் பெருகு வதோடு இல்லாமல், மீண்டும் நண்டும், நத்தையினமும் அதிகரிக்கும். இதனை விவசாயிகள் அனைவரும் உணர வேண்டும் என்றார்.

Related Stories: