குமரி மாவட்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்

குலசேகரம், மே 21: உலக தேனீ தினம் தேனீ வளர்ப்போர் மற்றும் தேன் உற்பத்தியாளர்களால் நேற்று கொண்டாடப்பட்டது. குலசேகரம் கொட்டூர் பகுதியில் நடந்த உலக தேனீ தின விழாவில் குமரி மாவட்ட முன்னோடி தேன் உற்பத்தியாளரும் தேனீ வளர்ப்பு பயிற்சியாளருமான ஹென்றி தலைமை வகித்தார். வசந்தகுமார் எம்எல்ஏ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், அயக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் சங்கரமணி, காங். தலைவர் வினோத் ராய், திற்பரப்பு கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்க நிர்வாகி ஜூடஸ்குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் மோகன் உள்பட பலர்கலந்து கொண்டனர். விழாவில் வசந்தகுமார் எம்எல்ஏ பேசியதாவது;  தேனீக்கள் இல்லை என்றால் விவசாயமே இல்லை என்ற வகையில் விவசாயத்திற்கு உறுதுணையாக உள்ளன. குமரி மாவட்டம் தேன் உற்பத்திக்கு உகந்த மாவட்டம் ஆகும். இங்கு தேன் உற்பத்தியை பெருக்குவதோடு, தேனீ வளர்க்க உரிய பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தேனீக்களை நோய்களில் இருந்து பாதுகாக்க தேனீ ஆராய்ச்சி மையம் குமரி மாவட்டத்தில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேனில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்து விவசாயிகள் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பேசினார்.

கருத்துக்கணிப்புகளை ஏற்க முடியாது வசந்தகுமார் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது:  தேர்தல்  கருத்துக்கணிப்புகளை நம்ப முடியாது. கருத்துக்கணிப்புகள் அதிகமுறை  பொய்த்து போய் உள்ளன. பல லட்சம் ேபர் வாக்காளர்களாக உள்ள நிலையில் சிலரிடம்  இருந்து கருத்துக்களை கேட்டு வெளியிடப்படும் கணிப்புகளை ஏற்க முடியாது.  வரும் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்ததும் காங்கிரஸ் அதிக இடங்களில்  வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்பார். நான் கன்னியாகுமரி  தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு  செல்வேன். இதில் துளியளவும் சந்தேகப்பட தேவையில்லை.  தேர்தல்  கமிஷனின் நடவடிக்கை நம்பிக்கையற்றதாகவே உள்ளது.

Related Stories: