குமரியில் ₹23 கோடியில் 4 இடங்களில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கும் பணி தீவிரம்

நாகர்கோவில், மே 21 :  குமரி மாவட்டத்தில் பள்ளம்துறை உள்பட 4 இடங்களில் மீன்பிடி இறங்கு தளம் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை 45க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மீன் பிடிக்க செல்கிறார்கள். குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீனவர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் முழு அளவில் உருவாக்க வேண்டும் என கோரிக்ைககள் எழுந்துள்ளன. குறிப்பாக மீன் பிடி இறங்கு தளம், தூண்டில் வளைவு,  கடலரிப்பு தடுப்பு சுவர்கள் போன்றவை தரமானதாக அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மீனவர்களின் நலனுக்காக பள்ளம்துறை, கேசவன்புத்தன்துறை, பொழிக்கரை, குறும்பனை பகுதிகளில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. இதில் பள்ளம்துறை, கேசவன்புத்தன்துறை, பொழிக்கரை பகுதிகளில் தலா ரூ.4 கோடியிலும், குறும்பனையில்  ரூ.11 கோடியிலும் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படுகிறது. பள்ளம் துறையில் தற்போது வரை 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மீதி உள்ள பணிகளும் ஜூன் இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். கேசவன்புத்தன்துறையில் 50 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு இருக்கின்றன. பொழிக்கரையில் 30 சதவீத பணிகள் தான் முடிவடைந்துள்ளன. குறும்பனையில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும் தருவாயில் உள்ளன. படகு அணையும் சுவர், வலை பின்னும் கூடம், அலுவலகக் கட்டிடம் மற்றும் இதர வசதிகள் இவற்றில் ஏற்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related Stories: