களக்காடு அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பழுதால் குடிநீர் சப்ளை பாதிப்பு

களக்காடு, மே 21:   களக்காடு அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பழுதால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ளது. களக்காடு அருகே உள்ள  கீழதேவநல்லூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த  ஊருக்கு  கீழதேவநல்லூர் பஞ்சாயத்து மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து  அதிலிருந்து தண்ணீர் எடுத்து 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்கத்  தொட்டியில் தேக்கி பின்னர் இரு நாட்களுக்கு ஒருமுறை குழாய்கள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்நிலை நீர்தேக்கத்  தொட்டி வால்வில் பழுது ஏற்பட்டு, அதிலிருந்து குடிநீர் வீணாகி வருகிறது.  இந்த பழுதால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. ஊருக்குள்  அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீர் வருவதில்லை என்று பொதுமக்கள்  புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் நீர்தேக்கத் தொட்டிகளின் வால்வை மர்ம நபர்கள் உடைத்து  விடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதையடுத்து குடிநீர் தட்டுப்பாட்டால்  பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குடிப்பதற்கும் சமையல் உள்ளிட்ட  தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தண்ணீருக்காக காலி  குடங்களுடன் பக்கத்து கிராமங்களுக்கு படையெடுக்கின்றனர். அங்கிருந்து  குடங்களில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதுபற்றி அந்த ஊரைச் சேர்ந்த  ராமசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘எங்கள் ஊரில் போதிய அளவு தண்ணீர் இருந்தும்  குடிநீர் தொட்டி பழுதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பழுதடைந்துள்ள  வால்வை சீர் செய்து தரும்படி களக்காடு யூனியன் அதிகாரிகளிடம் பலமுறை  மனுக்கள் மூலம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை,. அதிகாரிகள் அலட்சியத்தால்  குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம்'' என்றார்.

இந்த மேல்நிலை நீர்தேக்கத்  தொட்டியில் பழுதடைந்துள்ள வால்வை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல் குடிநீர் இணைப்புகளில்  பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார்களையும் அகற்ற வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: