கண்மணியாபுரத்தில் பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

கடையநல்லூர், மே 21:  கடையநல்லூர் அருகே கண்மணியாபுரத்தில் பழுதடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையநல்லூர் யூனியன் கண்மணியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நான்கு முக்கு சந்திப்பில் பாப்பான்கால்வாய் உள்ளது. இந்த பாப்பான்கால்வாயின் குறுக்கே பழமைவாய்ந்த கல் பாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்துதான் அருணாசலபுரம், பாலஅருணாசலபுரம், ராமேஸ்வரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். மேலும் கடையநல்லூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு செல்ல மிகவும் குறுகிய தூரமாக உள்ளதால் தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்துதான் சென்று வருகின்றன. அப்பகுதியில் கல்குவாரி செயல்படுவதால் ஏராளமான கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு இந்த பாலத்தில் சிறிய ஓட்டை விழுந்தது. நாளடைவில் இது பெரிய பள்ளமாக மாறியுள்ளது. ஏராளமான விவசாயிகளும் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் இப்பகுதியில் போதிய வெளிச்சமும் தெரிவதில்லை. இதனால் சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் தடுமாறி விழுந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், பாலம் பழுதாகி இருப்பதை தெரிவிக்கும் வகையில் கம்புகளை போட்டுள்ளனர். இந்த வழியாக வரும் கனரக வாகனங்களும் பாலத்தின் ஓட்டையில் டயர் இறங்கி விடக்கூடாது என்பதற்காக சற்று விலகி வரும்போது பாலத்தின் தடுப்பு சுவரையும் சேதப்படுத்தி விட்டு செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு பாலத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: