குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோயில் அருகே சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மின்கம்பம் அகற்றப்படுமா?

உடன்குடி,மே 21: குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோயில் அருகே சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மின்கம்பத்தை அகற்றி புதிதாக நடவேண்டுமென பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றுமின்றி வார விடுமுறை நாட்கள், வார நாட்கள் என தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி கன்னியாகுமரி, மணப்பாடு, ஆலந்தலை, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளும் குலசேகரப்பட்டினம் கடற்கரைக்கு வந்து செல்வர். மேலும் குலசேகரப்பட்டினம் கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வருவர்.

இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடற்கரையில் உள்ள சிதம்பரேசுவரர் கோயில் அருகேயுள்ள மின் கம்பம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் வாகனங்கள் ஏதும் கடற்கரைக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் வாகனங்களை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்கம்பம் விழுந்தது குறித்து அந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறியும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையில் குறுக்கே விழுந்து கிடக்கும் மின் கம்பத்தை அகற்றி புதிதாக மின்கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: