மழை வேண்டி தூத்துக்குடி சிவன் கோயிலில் வருண ஜெபம்

தூத்துக்குடி, மே 19: தமிழகத்தில் கோடை காலத்தில் நிலவும் வெப்பத்தை தணிக்கும் வகையிலும், மழை வேண்டியும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வருண ஜெபம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியான் உடனுறை சங்கரராமேஸ்வர கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம் நடந்தது. இதையொட்டி, கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் நடைபெற்ற வருண ஜெபத்தின்போது மழைப்பதிக பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் யாக குண்டத்தில் இருந்து தீர்த்த குடங்களை எடுத்து கோயில் பிரகாரத்தை வலம் வந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அக்னி நட்சத்திரம் நடைபெறுவதையொட்டி தாரா அபிஷேகம் தொடங்கியது. இந்த அபிஷேகம் மே 21ம்தேதி வரை நடைபெறுகிறது. கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் நடைபெற்ற வருண ஜெபத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.

Related Stories: