விசாகப்பட்டினம் அருகே காரில் கஞ்சா கடத்திய சென்னை கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் கைது

திருமலை, மே 17: விசாகப்பட்டினம் அருகே காரில் கஞ்சா கடத்திய சென்னை கல்லூரி மாணவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், கொத்தவலசா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரெட்டி சீனிவாசுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 9 கிலோ கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தி வந்த குண்டூரை சேர்ந்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதில், குண்டூரை சேர்ந்த ராகுல் ரெட்டி சென்னையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் குண்டூர் மாவட்டம் நரசு ராயப்பேட்டையை சேர்ந்த சாய் சுஸ்மந்த், குண்டூரை சேர்ந்த டிகிரி படித்து வரும் சாய் கிரண் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராகுல் ரெட்டி, தனக்கு சொந்தமான ஒன்றரை சவரன் தங்க செயினை அடகு வைத்த நிலையில் அதனை மீட்க சீனியர் மாணவர் அசோக்கிடம் தெரிவித்தார். இதற்கு அசோக் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு சென்று கஞ்சா கொண்டு வந்தால் பணம் தருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அசோக், ராகுல்ரெட்டிக்கு ஒரு நபரின் செல்போன் எண் மற்றும் ₹10 ஆயிரம் வழங்கி அனுப்பி வைத்தார். தொடர்ந்து, ராகுல் ரெட்டி தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பதிவு செய்யப்படாத புதிய காரை எடுத்துக் கொண்டு விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு வரும் போது போலீசாரிடம் சிக்கினர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: