செல்போன் பயன்படுத்த தடை வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஏஜென்டுகள் காலை 8 மணிக்குள் வரவேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, மே 17: வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஏஜென்டுகள் காலை 8 மணிக்குள் வர வேண்டும், செல்போன் கொண்டுவரக் கூடாது என ஆலோசனை கூடத்தில் கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து, வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரணி தொகுதிக்கும் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதையொட்டி, அங்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்ைகயின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது.

அதில், ஆரணி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி டிஆர்ஓ ரத்தினசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, ஆர்டிஓக்கள் தேவி(திருவண்ணாமலை), மைதிலி(ஆரணி), அன்னம்மாள்(செய்யாறு) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்ததாவது: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23ம் தேதி காலை 8 மணிக்குள், வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வந்துவிட வேண்டும். செல்போன் கொண்டுவர அனுமதியில்லை. ஒருமுறை மையத்தில் இருந்து வெளியே சென்ற பிறகு, மீண்டும் அனுமதிக்க மாட்டோம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேசைக்கும், தலா ஒரு ஏஜென்ட் பார்வையிட அனுமதி உண்டு. அதேபோல், தபால் வாக்கு எண்ணும் இடம், தேர்தல் நடத்தும் அதிகாரியின் இருக்கை, ஒப்புகை ரசீது எண்ணும் இடங்களிலும் ஏஜென்டுகளுக்கு அனுமதி உண்டு. எனவே, அதற்கு தகுந்த எண்ணிக்ைகயில் ஏஜென்டுகளை நியமிக்க வேட்பாளர்கள் கடிதம் அளித்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். அடையாள அட்டை வைத்துள்ள முகவர் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல முடியும். மேலும், வாக்கு எண்ணும் மையத்துக்குள் பணியில் ஈடுபடும் முகவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற வசதிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்படும். ஒவ்வொரு சுற்று முடிவும், அதிகாரப் பூர்வமாக தகவல் பலகையிலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறோம்.

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அதன்பிறகு, சுமார் 8.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த எண்ணிக்கை அனைத்தும் முடிந்த பிறகு, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 ஒப்புகை ரசீது இயந்திரங்கள் என்ற அடிப்படையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு 30 ஒப்புகை ரசீது இயந்திரங்கள், ஆரணி மக்களவைத் தொகுதிக்கு 30 ஒப்புகை ரசீது இயந்திரங்களில் பதிவான வாக்கு சீட்டுகள் எண்ணப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில், ஒரு சுற்றுக்கு 84 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும். மேலும், தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை என அனைத்தையும் கண்காணிக்க ஒரு வேட்பாளருக்கு தலா 90 ஏஜென்டுகளை அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: