திருப்பதி கோவிந்தராஜர் கோயில் பிரமோற்சவத்தின் 5வது நாளில் தங்க கருட வாகனத்தில் சுவாமி பவனி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருமலை, மே 16: திருப்பதி கோவிந்தராஜர் கோயில் பிரமோற்சவத்தின் 5வது நாளில் தங்க கருட வாகனத்தில் சுவாமி பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 4வது நாளான நேற்றுமுன்தினம் காலை கல்ப விருட்ச வாகனத்திலும் இரவு சர்வ பூபாள வாகனத்திலும் சுவாமி வீதி உலா வந்தார். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் கோவிந்தராஜர் எழுந்தருளி நான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவின் முன் யானைகள் அணிவகுத்து செல்ல பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள் நடைபெற்றது. வழி நெடுகிலும் கடை உரிமையாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.

பின்னர் காலை 9.30 மணி முதல் 11 மணி வரை சுவாமி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் பால், தயிர், தேன், சந்தனம் உட்பட பல்வேறு பழரசங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஊஞ்சல் சேவையும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், துணை செயல் அலுவலர் வரலட்சுமி, உதவி செயல் அலுவலர் உதயபாஸ்கர் ரெட்டி, கண்காணிப்பாளர் ஞானபிரகாஷ், ஹரி, ஆலய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தின் 6வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்திலும் இரவு கஜ (யானை) வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Related Stories: