திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 27ம் தேதி முதல் கோடைக்கால சுபப்பிரதம் பயிற்சி வகுப்பு தொடக்கம் 7, 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அனுமதி

திருமலை, மே 16: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 27ம் தேதி முதல் கோடைக்கால சுபப்பிரதம் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இதில் 7, 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் நமது பாரத சம்பிரதாயம், கலாசாரத்தை வருங்கால தலைமுறையினர் மாணவ, மாணவிகளுக்கு கொண்டு செல்லும் விதமாக கோடைக்கால சுபப்பிரதம் பயிற்சி வகுப்பு தேவஸ்தானம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு வருகிற 27ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 7, 8, 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சுபப்பிரதம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. 2012ம் ஆண்டு முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும்இந்த பயிற்சி வகுப்பில் வெங்கடேஸ்வர சுவாமியின் வாழ்க்கை வரலாறு, பகவத்கீதை, நமது சம்பிரதாயம், கலாசாரம், ராமாயணம், பாரத குடும்ப வாழ்க்கை நடைமுறை, கலாசார பண்டிகைகள், திருவிழாக்கள் உட்பட பல்வேறு விதமான பயிற்சிகள் திருப்பதியில் 7 மையங்களில் 3500 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

இதற்காக இந்து தர்ம பிரசார பரிஷத் திட்ட உதவியாளர், மாவட்ட தர்ம பிரசார பிரசாத் மண்டலி உறுப்பினர்கள், தேவஸ்தான கல்யாண மண்டபம் மற்றும் வெப்சைட் மூலமாக இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் அந்தந்த மண்டல மற்றும் மாவட்ட இந்து தர்ம பிரசார பிரசாத் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். திருப்பதியில் உள்ள மாணவர்களுக்காக அன்னமாச்சாரியா கலாமந்திரம், இந்து தர்ம பிரசார பரிஷத் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர திருப்பதி தேவஸ்தான கல்வி மையங்களான வெங்கடேஸ்வரா கலைக் கல்லூரி, பத்மாவதி கலைக் கல்லூரி,  கோவிந்த ராஜ சுவாமி கலைக் கல்லூரி,  வெங்கடேஸ்வரா ஜூனியர் கல்லூரி ,  பத்மாவதி ஜூனியர் கல்லூரி, ஓரியண்டல் கல்லூரி,  பத்மாவதி பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்புகளுக்கான தேவையான புத்தகங்கள், உணவு தங்கும் வசதி ஆகியவை தேவஸ்தானம் சார்பில் இலவசமாக செய்து தரப்பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: