திருப்பதி கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் உச்சநீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

திருமலை, மே 16: திருப்பதி கோயிலில் மழை வேண்டி நடந்து வரும் சிறப்பு யாகத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்றார். நாடு முழுவதும் மழை பெய்து, அணைகளில் நீர் நிரம்பி தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் காரீரி இஸ்டி யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு நேற்றுமுன்தினம் முதல் 18ம் தேதி வரை மழை வேண்டி பாபவிநாசம் செல்லும் சாலையில் பார்வேட்டை மண்டபம் அருகே காரீரி இஸ்டி யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் யாகத்தின் இரண்டாவது நாளான நேற்று காலை கணபதி யாகம், பார்ஜன்ய யாகம் நடத்தப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தனது மனைவியுடன் பங்கேற்றார். அவருக்கு யாகம் செய்து வரக்கூடிய வேத பண்டிதர்கள், ரூத்விக்குகள் யாகம் குறித்த பலன்களை விவரித்தனர். முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா ஏழுமலையான் கோயிலில் நடந்த அர்ச்சனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

Related Stories: