‘பல்லி விழுந்ததால் சகுனம் சரியில்லை’ குளித்துவரும்படி கூறி மூதாட்டியிடம் 10 சவரன், ₹1 லட்சம் திருடிச்சென்ற பெண் ஜோலார்பேட்டையில் நூதன முறையில் துணிகரம்

ஜோலார்பேட்டை, மே 16: ஜோலார்பேட்டையில் பல்லி விழுந்ததால் சகுனம் சரியில்லை, உடனே சென்று குளிக்கும்படி கூறி மூதாட்டியிடம் 10 சவரன் நகை, ₹1 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடிச்சென்ற பெண் உட்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(29). வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி இளையராணி. இவருடன் பாஸ்கரனின் தாய் குணசுந்தரி, பாஸ்கரனின் தாத்தா கண்ணன், பாட்டி யசோதா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாஸ்கரன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். நேற்றுமுன்தினம் பாஸ்கரன் தனது நண்பர்களை பார்க்க வெளியே சென்றார். இளையராணி மூக்கனூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கும், குணசுந்தரி கட்டிட வேலைக்கும் சென்றுவிட்டனர். வீட்டில் கண்ணன், யசோதா ஆகியோர் மட்டும் இருந்தனர். அசதி காரணமாக கண்ணன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது பாஸ்கரனின் வீட்டருகே சாப்பிட்டுக் கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 50 வயது மதிக்கதக்க ஒரு ஆணும் குடிக்க தண்ணீர் வேண்டும் என யசோதாவிடம் கேட்டுள்ளனர். இதனால் யசோதா தண்ணீர் எடுத்து வந்துள்ளார். இதற்கிடையே இளம்பெண்ணுடன் வந்த அந்த நபர், பழம் வாங்கி வருவதாக கூறி அங்கிருந்து சென்றார். அப்போது யசோதா தண்ணீர் எடுத்து வந்தபோது, அவர் மீது சுவற்றில் இருந்து பல்லி விழுந்தது. இதனை பார்த்த அந்த இளம்பெண் சகுனம் சரியில்லை, நீங்கள் சென்று குளித்துவிடுங்கள் எனக் கூறினாராம். இதையடுத்து யசோதா குளிக்க சென்றார். அப்போது வீட்டிற்குள் புகுந்த அந்த இளம்பெண், பீரோவை திறந்து நகை, பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டார். குளித்துவிட்டு வந்த யசோதா, துணிகளை எடுக்க பீரோவை திறந்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை, ₹1 லட்சம் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வெளியே வந்து பார்த்தபோது இளம்பெண்ணையும் காணவில்லை. பல்லியை மூதாட்டி மீது போட்டு நாடகமாடி இந்த நூதன திருட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஸ்கரன் ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பெண் உட்பட 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: