அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி சேர்க்கை தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

வேலூர், மே 15: அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி மாணவர் சேர்க்கை முழுமையாக நடைபெற ஒத்துழைப்பு நல்க வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களின் சேர்க்கைக்கான நடைமுறையை பின்பற்றி சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். கோடை விடுமுறை காலத்திலேயே சேர்க்கையினை நடத்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்துமாறு அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில் 5 வயதுடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் 1ம்வகுப்பு சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளியை சுற்றியுள்ள குடியிப்புகளில் உள்ள 5 வயதுடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களை உடனடியாக சேர்க்க வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சார்ந்த தகவலை பொது மக்கள் அனைவரும் அறியும்படி பேனர்கள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள், விளம்பரப்பலகைகள் மற்றும் பிரசார வாகனங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இடைநின்ற மாணவர்களை மீட்டு சேர்க்கை நடத்த வேண்டும். அரசின் திட்டங்களை பெற்றோர்களிடம் எடுத்து கூற வேண்டும். கிராமக் கல்விக்குழுக் கூட்டம், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் பணிபுரியும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட வேண்டும். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மாணவர்களின் சேர்க்கை சார்பாக நடக்கும் விழிப்புணர்வு பேரணி நடத்தும் போது பள்ளி மாணவர்கள் கட்டாயம் ஊர்வலத்தில் பங்கு பெறச் செய்யக் கூடாது. இந்த தகவலை அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேர்க்கை தொடர்பான விவரத்தை இயக்குனருக்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தது.

Related Stories: