3 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டவலம் ஜமீன் கோயிலில் மாயமான பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் குப்பைமேட்டில் கண்டெடுப்பு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை

வேட்டவலம், மே 16: வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான வேட்டவலம் மலைக்கோயிலில் மாயமான பல கோடி மதிப்பிலான மரகதலிங்கம் நேற்று ஜமீன் அரண்மனை வளாக குப்பை மேட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் மலையின் மீது பழம்பெருமை வாய்ந்த மனோன்மணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம் மற்றும் நகைகள் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி திருட்டு போனது. கொள்ளையர்கள் கோயிலின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பச்சை மரகத லிங்கம் மற்றும் அம்மன் தங்கத்தாலி, வெள்ளியால் செய்யப்பட்ட அம்மன் கிரீடம், பாதம், ஒட்டியாணம், பச்சை மரகத லிங்கம் மீது வைக்கப்படும் வெள்ளி நாகாபரணம் ஆகியவற்றையும் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து ஜமீன்தார் மகேந்திரபந்தாரியார் மற்றும் கோயில் குருக்கள் சண்முகம் கொடுத்த தகவலின் பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டடன. இந்த வழக்கு கடந்த ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மாதவன், டிஎஸ்பி ரமேஷ், வேட்டவலம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் சிலை திருட்டு தொடர்பாக கோயில் குருக்கள் சண்முகம், ஜமீன்தார் மகேந்திர பந்தாரியார் மற்றும் ஜமீன் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை ஜமீன் ஊழியர் பச்சையப்பன் ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பை மேட்டில் குப்பைகளை கொட்டச் சென்றார். அப்போது குப்பைக்குள் இருந்த மரகத லிங்கத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதை ஏற்கனவே மனோன்மணி அம்மன் கோயில் குருக்களாக இருந்து பின்னர் வேட்டவலம் அறம்வளர்த்த நாயகி சமேத அகதீஸ்வரர் கோயிலில் பணியாற்றும் குருக்கள் சத்தியமூர்த்தியிடம் காண்பித்தார். அவர் இது ஜமீன் கோயிலில் திருட்டுப்போன மரகத லிங்கம் தான் என்று கூறினார்.

இதையடுத்து பச்சையப்பன் அந்த மரகத லிங்கத்தை ஜமீன் அரண்மனைக்கு எடுத்து சென்று யாருக்கும் தெரியாமல் தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு ஜமீனுக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு வேலைக்கு சென்று விட்டார். இதற்கிடையில் மரகத லிங்கம் கிடைத்த தகவலை குருக்கள் சத்தியமூர்த்தி, தற்போது மனோன்மணி கோயிலில் குருக்களாக இருக்கும் சண்முகத்திடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த சண்முகம் இதுகுறித்து வேட்டவலம் போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக வேட்டவலம் சப் இன்ஸ்பெக்டர் மதன்குமார், எஸ்எஸ்ஐக்கள் கருணாநிதி, ரவி ஆகியோர் மரகத லிங்கத்தை கண்டெடுத்த பச்சையப்பனை பிடித்து ஜமீன் அரண்மனைக்கு அழைத்து வந்தனர். பச்சையப்பன் அங்கு தொட்டியில் வைத்திருந்த மரகத லிங்கத்தை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து எஸ்ஐ மதன்குமார், மரகத லிங்கத்தை ஜமீன்தார் குடும்பத்தினரிடம் காண்பித்து அது காணாமல் போன மரகத லிங்கம்தானா என்பதை உறுதி செய்தார். இதையடுத்து இந்த தகவல் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி மாதவனிடம் தெரிவிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை முடியும் வரை மரகத லிங்கம் வேட்டவலம் காவல் நிலையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் இன்று வேட்டவலம் வந்து மரகத லிங்கத்தை பார்வையிட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: