சேத்துப்பட்டு பகுதிகளில் கருகி வரும் கரும்பு பயிர்களால் விவசாயிகள் வேதனை நிவாரணம் வழங்க கோரிக்கை

சேத்துப்பட்டு, மே 16: சேத்துப்பட்டு பகுதிகளில் நிலவும் வறட்சியால், கரும்பு பயிர்கள் கருகி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டது திருவண்ணாமலை மாவட்டம். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இன்றி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய கிணறுகள் எல்லாம் வறண்டு காணப்படுகிறது. கிணற்று நீரை நம்பி வைத்த பயிர்கள் எல்லாம் தண்ணீரின்றி கருகி வருகிறது. சேத்துப்பட்டு பகுதிகளில் கரும்பு விவசாயிகளின் நிலை படுமோசமாக உள்ளது. தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் தண்ணீர் இல்லாமல் கரும்பு பயிர்கள் கருகி போயுள்ளன. வங்கிக்கடன், உரம் வாங்க கடன் என பல்வேறு இடங்களிலும் கடன் வாங்கி, பார்த்துபார்த்து பயிரிட்ட கரும்புகள் தற்போது கருகி வருகிறது. இதனால் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையே கசப்பாகி உள்ளது.

மேலும், சேத்துப்பட்டு, நம்பேடு, தேவிமங்கலம், முடையூர், தேவிகாபுரம், ஆத்துறை, பெரணம்பாக்கம், போளூர், கலசபாக்கம் என பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கரும்பு பயிரிட்டு, தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்து, அரசு நிர்ணயித்த பணம் கூட கைக்கு கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இயற்கையும் சதி செய்ததால், அவர்களது வாழ்வாதாரம் முடங்கிப் போயுள்ளது. வாங்கிய கடனை எப்படி தீர்ப்பது என திக்கு தெரியாமல் வேதனையில் மூழ்கி வருகின்றனர். எனவே, சேத்துப்பட்டு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: