செங்கம் அருகே பரிதாபம் முக்கிய வீதிகள் வழியாக மாதா சிலை பவனி வந்தபோது கிறிஸ்தவ ஆலய தேரில் மின்வயர் உரசி 2 பேர் பலி

செங்கம், மே 16: செங்கம் அருகே கிறிஸ்தவ ஆலய தேர் திருவிழாவில், மாதா சிலை பவனி வந்தபோது தேரில் மின்வயர் உரசியதில், மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் தூயலூர்து மாதா தேவாலயத்தில் நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. இரவு 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில், மாதா சிலை முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. முத்துவீதி வழியாக வந்தபோது, அங்குள்ள மின் கம்பத்தில் இருந்த மின்வயர் எதிர்பாராதவிதமாக தேரின் உச்சியில் உரசியது. இதில் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. அப்போது அங்கிருந்த அதே கிராமத்தை சேர்ந்த அன்பரசு(50), ஜெபராஜ்(40) ஆகியோர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதே கிராமத்தை சேர்ந்த பிரேம்ராஜ்(37) என்பவர் லேசான காயமடைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நாலாப்புறமும் சிதறி ஓடினர். பின்னர், காயமடைந்த பிரேம்ராஜ், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக வீடு திரும்பினார். தேர் பவனியின்போது 2 ேபர் பலியானதையொட்டி தேர் திருவிழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அன்பரசு மனைவி அன்னபூரணி பாச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்ெபக்டர் ெஜயந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தேரின் மீது மின்வயர் உரசி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: