பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

திருக்கோவிலூர், மே 15: திருக்கோவிலூர் அடுத்த பூமாரி கிராமத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி மகேஷ் மேற்பார்வையில் நடந்த கூட்டத்துக்கு திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதை எதிர்கொள்ளும் விதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி பேசுகையில், பெற்றோர்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமண வயது அடையும் முன்பே திருமணம் செய்து வைக்கக்கூடாது. பெண் பிள்ளைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கவனிப்பது பெற்றோர்களின் கடமை. சந்தேகப்படும் படியான நபர்களிடம் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம். செல்போனில் சமூகவலைதளங்களில் தேவையற்ற விஷயங்களை பார்க்கின்றார்களா என்பதனையும் கண்காணித்து அதனை தடுக்க வேண்டும். பெண்பிள்ளைகள் தானே என்று அவர்களை உதாசீனப்படுத்தக்கூடாது. பெற்றோர்கள் பெண் பிள்ளைகளிடம் நண்பர்களாக பழகி அவர்களின் அச்சத்தை போக்க வேண்டும். என்று கூறினார். தொடர்ந்து அரகண்டநல்லூரிலும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தலைமை காவலர்கள் சித்ரா, கோகிலா, காவலர் ஆனந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: