பழுதடைந்து கிடக்கும் மினி டேங்க்

கள்ளக்குறிச்சி, மே 15:     கள்ளக்குறிச்சி நகராட்சி 4வது வார்டு க.மாமனந்தல் ரோடு பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. அந்த கிணற்றில் இருந்து கள்ளக்குறிச்சி நகர பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகர மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்கிய ஆழ்குழாய் கிணறு கடந்த ஒரு வருடமாக பழுதடைந்த நிலையில் மினி டேங்க் உடைந்து சேதமாகி உள்ளது. மேலும் மின்மோட்டார் பெட்டி

களும் சேதமடைந்து பராமரிப்பு இன்றி செடிகொடிகள் வளர்ந்து பாழடைந்த நிலையில் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆழ்குழாய் கிணற்றில் நீர் ஊற்று அதிகப்படியாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான ஆழ்குழாய் கிணற்றில் போதுமான அளவில் நீர் ஊற்று இல்லாத நிலையில் உள்ளது.     ஆனால் நீர் ஊற்று அதிகப்படியாக உள்ள க.மாமனந்தல் ரோடு பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றை பராமரிப்பு செய்து மினிடேங்க் மற்றும் மின்மோட்டாரை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பழுதடைந்த நிலையில் உள்ள மினி டேங்க் மற்றும் மின்மோட்டாரை இனியாவது பராமரிப்பு செய்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: