வல்லம் கிராமத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்து மழை வேண்டி தவளையை குளத்தில் விட்டு நூதன பூஜை

கண்ணமங்கலம், மே 15: கண்ணமங்கலம் அடுத்த வல்லம் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன பூஜை செய்தனர். தமிழகத்தில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் ஆங்காங்கே காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மழை இல்லாததால் விவசாயிகளின் வாழ்வாதரமே கேள்விக்குறியாகி உள்ளது. போதிய நீர் இல்லாமலும், கடும் வெப்பத்தாலும் கால்நடைகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த வல்லம் கிராமத்தில் உள்ள ஏரியில் கிராம தேவதை மஞ்சியம்மனுக்கு களி, கருவாட்டு குழம்பு படையலிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது, சிறிய செயற்கை குளம் அமைத்து அதில் தவளைகளைவிட்டனர். பின்னர், பெண்கள் சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து மழை வேண்டி அழுதனர். இதுபோல் பூஜை செய்வதால் மழை வரும் என்பது ஐதீகம் என கிராமமக்கள் கூறினர். பின்னர், இதில் கலந்து கொண்டவர்களுக்கு கலியும், கருவாட்டு குழம்பு விருந்து அளிக்கப்பட்டது.

Related Stories: