5 ஆண்டுகளில் இரட்டிப்பு தருவதாக மோசடி தனியார் நிறுவன சேமிப்பு திட்டத்தில் ₹10 லட்சம் இழந்த கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

திருவண்ணாமலை, மே 14: 5 ஆண்டுகளில் இரட்டிப்பு தருவதாக கூறி தனியார் நிறுவன சேமிப்பு திட்டத்தில் ₹10 லட்சத்தை இழந்த பெண்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறையால் கடந்த மார்ச் 10ம் தேதி முதல் நடைபெறவில்லை. ஆனாலும், ஒவ்வொரு திங்கள் கிழமையும், மனுக்களை அளிப்பதற்காக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிகின்றனர்.அதன்படி, நேற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். ஆனால், பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெறவில்லை. எனவே, கலெக்டர் அலுவலகத்தில் வைத்துள்ள புகார் பெட்டியில், தங்களுடைய மனுக்களை செலுத்திவிட்டு சென்றனர். இந்நிலையில், சேத்துப்பட்டு தாலுகா, பெரணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை சேமித்து ஏமாந்ததாக புகார் அளிக்க வந்தனர். அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, கோரிக்கை மனுவை, புகார் பெட்டியில் செலுத்தினர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 53 பெண்கள், ராயல் அக்ரோ டைரி லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்தில் மாதந்தோறும் பணத்தை சேமித்தோம். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், அதற்கு ஏஜென்டாக செயல்பட்டார். கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மொத்தம் ₹10 லட்சம் சேமிப்பு தொகையை தனியார் நிறுவனத்தில் பணத்தை செலுத்தினோம். ஐந்து ஆண்டுகள் முடிந்ததும், சேமிப்பு பணத்தை இரட்டிப்பாக தருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால், சேமிப்பு கால அவகாசம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை சேமித்த பணத்தையும் தரவில்லை, இரண்டு மடங்கு பணத்தையும் தரவில்லை. தொடர்ந்து அலைகழிக்கின்றனர். எனவே, எங்களுடைய சேமிப்பு பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். அதேபோல், போளூர் தாலுகா கரிகாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களுடைய கிராமத்துக்கு அருகே செல்லும் செய்யாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் நடப்பதாக புகார் மனு அளிக்க வந்தனர். கிராமத்துக்கு குடிநீர் சப்ளை செய்ய அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு அருகே மணல் எடுப்பதால், நீராதாரம் பாதிப்பதாக புகாரில் தெரிவித்திருந்தனர். மேலும், மணல் கடத்திய 7 மாட்டு வண்டிகள் மீது போளூர் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்ததும் தொடர்ந்து மணல் கடத்தல் நடக்கிறது. மணல் கடத்தலை தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனர் என புகாரில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: