செய்யாறு, கீழ்பென்னாத்தூரில் அதிகாரிகள் சமரசம்

செய்யாறு, மே 14: செய்யாறு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ெசய்யாறு அடுத்த தண்டரை ஊராட்சி தண்டரை மேட்டுகாலனி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு மேல்நீர் தேக்கத்தொட்டி மற்றும் 4 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தண்டரை ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யவில்லையாம். குடிநீர் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து, செய்யாறு பிடிஓ அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை செய்யாறு- ஆரணி சாலையில் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு பிடிஓ பாரி, தாசில்தார் மூர்த்தி, செய்யாறு சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள், ‘செய்யாற்றில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றை தூர்வாரி எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'''''''' என கோரிக்கை விடுத்தனர். உடனடியாக குடிநீர் வழங்கவும், செய்யாற்றில் உள்ள கிணற்றை தூர்வாரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி கோயில்மேடு பகுதியில் உள்ள பழைய காலனியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு வெயில் காரணமாக வறண்டு விட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீரான குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் திருவண்ணாமலை- சென்னை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் அவ்வழியாக வந்த கீழ்பென்னாத்தூர் தாசில்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் பிடிஓ மாகதேவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாக பிடிஓ உறுதியளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: