கடனை திருப்பி செலுத்திய பிறகும் வீட்டை பூட்டிச் சென்ற அண்ணன் மீது நடவடிக்கை வலியுறுத்தி தம்பி உட்பட 5 பேர் தீக்குளிக்க முயற்சி திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, மே 14: கடனை திருப்பி செலுத்திய பிறகும் வீட்டை பூட்டி விட்டு சென்ற அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பி உட்பட 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகாவிற்குட்பட்ட நவாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் என்பவரின் மகன் திருப்பதி(42), இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி சுமதி, தனது வீட்டிலேயே டிபன் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு மீனா(16), துர்கா(14) என்ற மகள்களும், விமல்ராஜ்(13) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், திருப்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவசர பணத் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், தனது அண்ணன் பாஸ்கரன் என்பரிடம் தனது வீட்டை அடமானம் வைத்து ₹2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை அவ்வப்போது, தவணை முறையில் திருப்பதி தனது அண்ணனிடம் திருப்பி செலுத்தி வந்துள்ளார். பெற்ற கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து ₹3 லட்சத்திற்கு மேல் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது வீட்டின் அடமான பத்திரத்தை திருப்பி தரும்படி திருப்பதி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரனிடம் கேட்டார். அதற்கு அவர், நீ வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ₹10 லட்சம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் வீட்டை எனது பெயருக்கு எழுதி தரவேண்டும் என கூறியுள்ளார். அதற்கு திருப்பதி வாங்கிய கடன் தொகையை செலுத்தி விட்டேன் வீட்டை எழுதி கொடுக்க முடியாது என கூறிவிட்டு வந்தார். இதனிடையே, திருப்பதி வேலைக்கு சென்று விட்டதால், வீட்டில் சுமதி, மகன் மற்றும் மகள்களுடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 11ம் தேதி இரவு பாஸ்கரன் தனது தம்பி வீடான திருப்பதி வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, வீட்டை பூட்டி சாவி எடுத்து சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சுமதி தனது குழந்தைகளுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டிற்கு வெளியிலேயே கடந்த 2 நாட்களாக இருந்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து திருப்பதி நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்க தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்தவர், திடீரென கலெக்டர் அலுவலகம் போர்டிகோ பகுதியில் பையில் வைத்திருந்த மண்ணெண்ணை எடுத்து அனைவர் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை கண்ட அங்கிருந்த சிலர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் வின்சென்ட் ராஜசேகர் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, சுமதி அதிகாரி காலில் விழுந்து நடந்தவற்றை கூறி தங்களை காப்பாறுமாறு கதறி அழுதார். பின்னர், விசாரணை நடத்தி பாஸ்கரனிடமிருந்து சாவியை பெற்று திருப்பதியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தனித்துறை ஆட்சியர் தனது வாகனத்தில் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மேலும், உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி கடலாடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: