கஜா புயல் தாக்கம் எதிரொலி பொருட்கள் வாங்க கடைகளுக்கு மக்கள் வராததால் விற்பனை மந்தம் வியாபாரிகள் கவலை

புதுக்கோட்டை, ஏப்.22: புதுக்கோட்டை  மாவட்டம், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு எதிரொலியால்  மக்கள் ஆர்வமாக  பொருட்கள் வாங்க முன்வராததால் அனைத்து விதமான விற்பனைகளும் கடும்  பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை  மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாத்தில் தாக்கிய கஜா புயலால் கடுமையான  பாதிப்பு ஏற்பட்டது. தென்னை, நெல், வாழை, பலா உள்ளிட்ட அனைத்து விதமான  விவசாயமும் முற்றிலும் அழிந்தது. மேலும் ஓடு, கூறை வீடுகள் என அனைத்தும்  காற்றில் அடித்துச்செல்லப்பட்டு நாசமாயின.தற்போது அரசு சார்பில் நிவாரண  பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஏற்றப்பட்டு வருகிறது. இதில்  பெருவாரியான பேருக்கு உரிய நிவாரணம்  கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டும்  எழுந்துள்ளது. பிறகு சிலருக்கு நிவாரணம் கிடைக்கப்பெற்றது.  மேலும்  புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரபட்சத்துடன் நிவாரண பொருட்கள் வழங்குவதாக  பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.  இதனையடுத்து போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று  பேச்சுவார்த்தை நடத்தி சமாதனப்படுத்தி வந்தனர். இதன் பிறகு பலருக்கு  நிவாரணம் கிடைத்தது.

ஆனால், அந்த நிவாரணம் போதுமானதாக இருந்தது. குறிப்பாக  அரசு சார்பில் தென்னை விவசாயிகளுக்கு வழங்கிய நிவாரணம், கீழே விழுந்த  தென்னைகளை வெட்டி எடுக்க தேவையான செலவுக்கு கூட போதாது என்பது  குறிப்பிடத்தக்கது.  இதனால் விவசாயிளிடம் போதிய வருமானம் இன்றி உள்ளனர். இதனால் மக்கள் நகர் பகுதிக்கு சென்று பொருட்களை வாங்க ஆர்வமின்றி  இருக்கின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறிய, பெரிய நகரங்களில்  உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட அனைத்து  விதமான கடைகளிலும் போதிய விற்பனை நடைபெற வில்லை. இதே நிலை தொடர்ந்து பல  மாதங்களாக நீடிப்பதால் வருமானம் இன்றி செலவுகளை மாளிக்க முடியாமல்  வியபாரிகம் மிகவும் கவலையில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:  ஒவ்வொரு வருவாய் ஆண்டின் முடிவில் நாங்கள் பல தள்ளுபடிகளை போட்டு விற்பனை  செய்வோம். இதனால் தேங்கி கிடக்கும் பொருட்களை  நஷ்டமில்லாமல் கொள்முதல்  செய்யப்பட்ட அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்துவிடுவோம்.

ஆனால்  இந்த ஆண்டு  இதுபோல் எங்களால் விற்னை செய்ய முடியவில்லை. நாங்கள் பல  யுக்திகளை கையாண்டும் விற்பனை அதிகரிக்கவில்லை. மந்தமாகவே உள்ளது. இதற்கு  முக்கிய காரணம் கஜா புயல்தான். குறிப்பாக மாவட்டத்தில் அதிகம் பேர்  விவசாயிகள். கஜாவின் கோரத்தாண்டவத்தால் விவசாயம் முற்றிலும்  நாசமாகிவிட்டது.விவசாயிகள் அதில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு  வருகின்றனர். இதனால் பெரு நரங்களுக்கு வந்து தேவையான பொருட்களை வாங்க  மக்களுக்கு மனமில்லை. இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இன்னும்  சில மாதங்களுக்கு பிறகு  ஓரளவிற்கு விற்பனை இருக்கும் என்று  எதிர்பார்கிறோம். மக்களை குறை சொல்ல முடியாது. அவர்களிடம் பணம் இருந்தால்  கண்டிப்பாக நகரங்களை தேடி வருவார்கள். பணம் இல்லாததால் அவர்கள் வரவில்லை. இதனால் எங்களுக்கு விற்பனை படு மந்தமாக உள்ளது. இதனால் எங்களுக்கு எந்தவித  லாபம் வரப்போவதில்லை என்று கவலையுடன் தெரிவித்தனர்.

Related Stories: