மீன்பிடி தடை காலத்தால் கடல்மீன் வரத்து குறைந்தது அசைவ பிரியர்கள் ஏமாற்றம்

திருமயம், ஏப்.22: மீன் பிடி தடை காலத்தால் கடல் மீன் வரத்து குறைந்தது. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.  தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கடலில் உள்ள மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் வருடம் தோறும் இந்த மாதங்களில் அரசு கடலில் மீன் பிடிக்க தடைவிதிப்பது வழக்கம். அப்போது கடல் மீன் வரத்து குறைவதால் அசைவ பிரியர்கள் மீனை தவிர்த்து ஆடு, கோழி, வளர்ப்பு மீன் இறைச்சிக்கு மாறிவிடுவார்கள். இதனால் இறைச்சிகளின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படும். இந்நிலையில் பெரும்பாலானோர் வளர்ப்பு மீன்கள், கோழி இறைச்சிகளை விரும்பாததால் குறிப்பிட்ட இந்த நாட்களில் அசைவத்தை தவிர்ப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று ஞாயிறு விடுமுறைநாள் என்பதால் திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் வழக்கம் போல் அசைவ பிரியர்கள் குவிய ஆரம்பித்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு கடல் மீன்கள் வரவு இல்லாத நிலையில் விலையும் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இதற்கு பதிலாக ரோகு, கட்லா, சிலேபி உள்ளிட்ட வளர்ப்பு மீன்கள் அதிகளவு வந்திருந்தன. இந்நிலையில் வளர்ப்பு மீன்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டினர்.அதே சமயம் ஆடு, கோழி இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட சற்று கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இருந்த போதிலும் மீன்களை விரும்பி உண்ணும் பிரியர்களுக்கு போதுமான கடல் மீன் வரவு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: