முஷ்ணத்தில் இருதரப்பினர் மோதல்

முஷ்ணம், ஏப். 22:  கடலூர் மாவட்டம் முஷ்ணம் மங்காங்குளம் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (20). இவரது நண்பர் பிரகாசம். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் முஷ்ணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தில் உட்கார்ந்திருந்தனர். அப்போது தேத்தாம்பட்டு பகுதியை சேர்ந்த சேகர் மகன் ராஜீவ்காந்தி (32), கலியமூர்த்தி மகன் ராஜா (34), சேகர் மகன் ராஜா (36) ஆகிய 3 பேரும் அந்த வழியாக வந்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர்கள் 3 பேரும் திடீரென பாலத்தில் அமர்ந்திருந்த தமிழரசன், பிரகாசத்தை ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ராஜீவ்காந்தி தரப்புக்கு ஆதரவாக முஷ்ணம் திருப்பானாழ்வார் தெருவை சேர்ந்த சிலர் தமிழரசனை உருட்டுக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையே இதுகுறித்து தகவலறிந்து தமிழரசன் தரப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். இதனால் இரண்டு சமூகத்தினர் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் மோதல் ஏற்படாத வண்ணம் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுதொடர்பாக தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராஜீவ்காந்தி (32), ராஜா(34), மற்றொரு ராஜா (36) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 50 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இது குறித்து தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவகர்லால், கடலூர் ஏடிஎஸ்பி அசோக் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் பொருட்டு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: