கடலூர் தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை

கடலூர், ஏப். 22: ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடலூரில் உள்ள தேவாலயங்களில் கூட்டு திருப்பலி நடந்தது. கடலூரில் புனித கார்மேல் அன்னை ஆலயம், கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயம், கடலூர் சாமிப்பிள்ளை நகர் புனித சகாய அன்னை ஆலயம், புனித யோவான், மஞ்சக்குப்பம் புனித எபிபெனி சி.எஸ்.ஐ தேவாலயம், கடலூர் முதுநகர் மணவெளி அக்கினி எழுப்புதல் தேவாலயம், கடலூர் ஆற்காடு லுத்தரன் திருச்சபை உள்ளிட்ட தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை நடந்தது. இப்பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில்  நேற்று முன் தினம்  நள்ளிரவில் கூட்டு  திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இவற்றில் மக்கள் புத்தாடை அணிந்து கையில் மெழுகு வர்த்தி ஏந்தியவாறு உற்சாகமாக பங்கேற்றனர். திருப்பலி மற்றும் ஆராதனைகள் முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் இருந்து  தாங்கள் வைத்திருந்த மெழுகுவர்த்திகளில் தீபமேற்றிக்கொண்டு அவற்றை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று  தங்கள்   வீடுகளில் புதிய ஒளியை உருவாக்கினர். கடலூர்  புனித  கார்மேல் அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி  பங்கு தந்தை ஆண்டனி லூர்துராஜ் அடிகளார் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் அருட்தந்தையர் ஜோனாஸ், ரோசாரியோ மற்றும் பங்கு மக்கள், பிரதிநிதிகள் மற்றும்  திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: