பொதுமக்கள் வசித்த பகுதியில் இருந்த இறைச்சி கடைகள் அதிரடி அகற்றம்

முஷ்ணம், ஏப். 21: முஷ்ணம் நகரம் சிறப்பு பேரூராட்சிக்கு உட்பட்டது. இங்கு பிரதான கடைவீதி மற்றும் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் தொடர்ச்சியாக நான்கு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது. இறைச்சி கழிவுகளை அங்கேயே போட்டு விட்டு சென்றதால் நாளடைவில் துர்நாற்றம் வீசுவதாகவும், நாய் தொல்லை அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.இறைச்சிக்காக ஆடுகளை சாலையோரம் போட்டு அறுப்பதால் இப்பகுதி மக்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வந்தனர். மேலும், இறைச்சி கடைகளுக்கு அருகிலேயே பிரசித்தி பெற்ற பூவராக சுவாமி திருக்கோயில், ராமர் கோயில் மற்றும் மசூதியும் இருக்கிறது. எனவே, இதனை அகற்றி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முஷ்ணம் பேரூராட்சி நிர்வாக செயலர் மயில்வாகனன், துப்புரவு பணியாளர்களுடன் சென்று இறைச்சி கடை உரிமையாளர்களிடம், இங்கு கடைகள் வைக்கக்கூடாது, வடக்கு செட்டித் தெருவில் பேரூராட்சி இடத்தில் உள்ள மீன் கடைகள் அருகே ஒரே இடத்தில் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும்  பொதுமக்கள் பார்வையில் படும்படி சாலையில் போட்டு ஆடுகளை அறுக்கக் கூடாது. இதற்காக பேரூராட்சி கறி அறுக்கும் இறைச்சி கூடத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்அதன்பின்னர் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த இறைச்சி கடைகள் இயங்கவில்லை. பேரூராட்சி அதிகாரிகள் அறிவித்த இடத்தில் கடைகள் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: