60 கண்காணிப்பு குழுக்கள் இருந்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் விற்பனை அமோகம்

புதுக்கோட்டை, ஏப்.21: புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 கண்காணிப்பு குழுக்கள் இருந்தும் பிளாஸ்டிக் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள்  விற்பனை அதிகமாக நடைபெற்ற வந்தது. குறிப்பாக நாளுக்கு நாள் ஓட்டல், மளிகை  கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான விற்பனை நடைபெறும்   கடைகளிலும் பிளாஸ்டிக் விற்பனை அதிகரித்து கொண்டே இருந்து வந்தது.  இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுசூழல் கடுமையாக பாதிப்படைந்து  வருகிறது. இதனால் மண்வளம் கெட்டு விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள்  கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி 1ம்  தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை   விதிக்கப்பட்டது. தடையை மீறி பிளாஸ்டிக் விற்பனை செய்தால் கடுமையாக  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.  இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகள், 8  பேரூராட்சிகள், 497 கிராம பஞ்சாயத்துகள் என அனைத்து பகுதிகளிலும்  பிளாஸ்டிக் பொருட்களை விற்பனையை தடுக்கும்பொருட்டு  புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்  பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணித்து தடுத்திடும் வகையில் நகராட்சி ஆணையர்,  பேரூராட்சி செயல் அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், காவல்துறை,  வருவாய்த்துறை உள்ளிட்ட  192 அலுவலர்கள் கொண்ட 60 கண்காணிப்பு குழுக்கள்  அமைக்கப்பட்டது.

இந்த குழுவினருக்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு  பகுதிகளுக்கு நேரடியாக சென்று அரசால் தடைசெய்யப்பட்டு உள்ள பிளாஸ்டிக்  தாள்கள், விரிப்புகள், பிளாஸ்டிக் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள்  போன்ற பல்வேறு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அவற்றை  கண்டறிந்து பறிமுதல் செய்யவும், பறிமுதல் செய்யப்படும் பொருட்களை  சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதுடன், இது குறித்த  தகவலினை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு  இருந்தது. மேலும் இந்த குழுக்கள் பல இடங்களில் பிளாஸ்டிக் குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன்  மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக  முழுசெயல்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட  அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவிவுறுத்தப்பட்டு  இருந்தது. இந்நிலையில் இந்த குழுக்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை  ஏற்படுத்தியது. குறிப்பாக புதுக்கோட்டை நகராட்சி பல்வேறு இடங்களில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. கடந்த ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க தொடங்கியது.

 குறிப்பாக புதுக்கோட்டை நகராட்சியில் பல்வேறு  இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதானல் அனைத்து  கடைகளிலும் பிளாஸ்டிக் விற்பனை இல்லை என்று நோட்டீஸ் ஒட்டினர். ஆனால்  தற்போது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் விற்பனை அமோகமாக  நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல ஓட்டல்கள். மளிகை கடைகள், காய்கறி  கடைகள், பூக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் என பல கடைகளில் பிளாஸ்டிக்  பயன்பாடு  அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓட்டல்களில் சாம்பார் கட்டுவது  உள்ளிட்டவற்றிற்கு முழுமையாக பிளாஸ்டிக் பாக்கெட்டுகள்  பயன்படுத்தப்படுகிறது. சில மெடிக்கல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது.  இப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் விற்பனை  அமோகமாக நடைபெற்று வருகிறது. கண்காணிப்பு குழுவால் எந்த பயனும்  ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கண்காணிப்பு குழுக்கள் முறையாக  செயல்பட்டு இருந்தால் பிளாஸ்டிக் பயன்பாடு கண்டிப்பாக குறைத்திருக்க  முடியும்.  இனியாவது கண்காணிப்பு குழுக்கள் முறையாக செயல்பட்டு  பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  எழுந்துள்ளது.

Related Stories: