இரண்டாவது நாளாக கட்டுமாவடி, மணமேல்குடி பகுதிகளில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

மணமேல்குடி, ஏப்.21: கட்டுமாவடி, மணமேல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் கோடைமழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை வறட்சி மிகுந்த மாவட்டமாக கருதப்படுகிறது. இம்மாவட்டத்தில் வெப்பநிலை 95 டிகிரிக்கு மேல் நீடித்து வருகிறது. இதனால் அனைத்து மக்களும் வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சப்படுகிறார்கள்.

மேலும் பல பகுதிகளில் நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயிகளும் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவில் பெரும் மேக மூட்டங்கள் சூழ்ந்து இடியுடன்  கடும் மழையும் பொழிந்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பெய்த கடும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

பொன்னமராவதி: பொன்னமராவதி பகுதியில் நேற்று மாலை பலஇடங்களில் இடியுடன் மழை பெய்துள்ளது. இதில் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஆலவயல், நகரப்பட்டி, காரையூர் பகுதிகளில் நேற்று  மாலை பலத்த காற்று இடியுடன லேசான மழை பெய்தது. அப்போது விவசாய கூலி தொழிலாளியான வௌ்ளகுடியை சேர்ந்த ரவி மனைவி அறிவுச்செல்வி என்பவர் வீட்டின் அருகே கட்டியிருந்த பசுமாடு இடி தாக்கி இறந்தது. இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: