புதுக்கோட்டை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு துவக்கத்தில் மந்தம், மாலையில் விறுவிறுப்பு

புதுக்கோட்டை, ஏப்.19: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடக்கத்தில் சுனக்கமாக காணப்பட்டது. பின்னர் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கரூர் தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை, சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி, திருமயம், ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு வாக்காளர்களின் நலனுக்காக பந்தல்கள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் பந்தல், குடிநீர் வசதி செய்யப்படாததால் கடும் அவதி அடைந்தனர்.

புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, காமராஜபுரம், போஸ்நகர், திருக்கோகர்ணம் அரசு பள்ளி, அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் வெயிலின் தாக்கம் காரணமாக நேரம் ஆக ஆக வாக்காளர்களின் கூட்டம் குறைய தொடங்கியது. குறிப்பாக திருமலைராயசமுத்திரம், குளவாய்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர்கள் இன்றி வெறிச்சொடி காணப்பட்டன.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இலுப்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியிலும், கந்தர்வகோட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுமுகம் நார்த்தமலையில் உள்ள வாக்குச்சாவடியிலும், புதுக்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு புதுக்கோட்டை பெரியார்நகரில் உள்ள வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி  புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி நெற்குப்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நடக்க முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடக்க முடியாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து சக்கர நாற்காலிகள் வாடகைக்கு வாங்கப்பட்டு இருந்தன. இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், திருமயம், காரையூர், பொன்னமராவதி, நார்த்தாமலை, கீரனூர், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, திருவரங்குளம், கீரமங்கலம், வடகாடு, அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையங்களில் நேற்று காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Related Stories: