வாட்ஸ் அப்பில் அவதூறு தகவல் பொன்னமராவதி காவல்நிலையம் முற்றுகை, பஸ் மறியலால் பரபரப்பு போலீஸ் குவிப்பு

பொன்னமராவதி, ஏப்.19: பொன்னமராவதியில் ஒரு சமூகத்தினரை பற்றி வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, பஸ்நிலையத்தில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாட்ஸ்அப்பில் முத்தரையர் சமூகத்தினரை தவறாக சித்தரித்து தகவல் வெளியிடப்பட்டது. இதுபற்றி அறிந்த முத்தரையர் சமூகத்தினர் ஒன்றுகூடி நேற்றிரவு பொன்னமராவதி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவதூறு பரப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி புகார்மனு எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது, சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன் அங்கிருந்து சிலர் பொன்னமராவதி பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்துகளை பஸ்நிலையத்தில் உள்ளே வராமலும், வெளியே செல்ல விடாமலும் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்த கடைகளை அடைக்கும்படி கூறினர். இதனால் கடைகள் மூடப்பட்டது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி செல்வராஜன் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதாக உறுதி கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து பொன்னமராவதி முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு 11 மணிக்கு மேல் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. இச்சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Related Stories: