அரியலூரில் வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் ஆய்வு

அரியலூர், மார்ச் 27: அரியலூர் மாவட்டத்தில் 2,866 வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்து அளிக்கப்படும் பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயலட்சுமி பார்வையிட்டார். அரியலூர் மாவட்டம், அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்துவது குறித்த பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார். இப்பயிற்சியில் கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல்  நடைபெறுவதையொட்டி, அரியலூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் தலைமை தேர்தல் அலுவலர்கள் அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்துவது குறித்து அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 297 வாக்குப்பதிவு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள 1,445 பேர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 292 வாக்குப்பதிவு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள 1,421 பேர் என மொத்தம் 2,866 நபர்களுக்கு நேற்று அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டது என்றார்.இப்பயிற்சியில், ஆர்டிஓ சத்தியநாராயணன், தாசில்தார் கதிரவன், மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: