ஏழைகள் மீது அக்கறை இல்லை நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை

சேலம், மார்ச் 19: ஏழைகள் மீது அக்கறை இல்லாத மோடிக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு அலை உள்ளதாக சேலத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம், கோட்டையில் நேற்றிரவு நடந்தது. மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மாநகர காங்கிரஸ் செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இதில், சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூட்டத்தில் ேபசுகையில், “சமீபத்தில் காவலன் என பெயர் மாற்றிக் கொண்ட மோடி, இந்தியாவுக்கும், பெண்களுக்கும், விவசாயத்திற்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இல்ைல. மாறாக அதானிக்கும், அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே காவலனாக உள்ளார். ஏழைகள் மீது அக்கறை இல்லாத மோடி மீது, நாடு முழுவதும் எதிர்ப்பு அலை உள்ளது. அம்பானி, அதானியின் 3 லட்சத்து 68 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்த மோடி, விவசாயிகளுக்காக ஒரு பைசாவை கூட தள்ளுபடி செய்யவில்லை.

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் தவறான பொருளாதார கொள்கையால், சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. அதிமுக-பாஜக கூட்டணிக்கு கோப அலை, எதிர்ப்பு அலை என பெயரை மாற்றி வைத்துக்கொள்ளலாம். நடைபெறவுள்ள தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிலும், 18 சட்டமன்ற தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று, மோடி ஆட்சிக்கு சமாதி கட்டப்படும். எடப்பாடி ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும்,” என்றார்.

கூட்டத்தில், மத்திய மாவட்ட திமுக பொருளாளர் சுபாஷ், சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் வெங்கடபதி, மதிமுக ஆனந்தராஜ், விசிக நாவரசன், முஸ்லீம் லீக் அன்சர்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: