சேலம் மார்க்கெட்டில் மாதுளை, முலாம்பழம் விற்பனைக்கு குவிப்பு

சேலம், மார்ச் 19: சேலம் மார்க்கெட்டில் மகராஷ்டிரா மாதுளை, ஆந்திரா முலாம்பழம் விற்பனைக்காக டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளி மாவட்ட வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.  சேலம் டவுன், சத்திரம் பழ மார்க்கெட்டுகளுக்கு மகராஷ்டிராவில் இருந்து மாதுளை வரத்து அதிகரித்துள்ளது. மகராஷ்டிராவில் கோலப்பூர், மணிராஜா, சோலாப்பூர், சத்து, மிரோச்சி பகுதிகளில் இருந்து நேரடியாக தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்கு லாரிகளில் மாதுளை கொண்டு வரப்படுகிறது. சேலம் மார்க்கெட்டிற்கு தினமும் 25 டன் அளவிற்கு விற்பனைக்காக வந்திறங்குகிறது. சிறியது, பெரியது என 10 கிலோ எடை கொண்ட பாக்ஸ் ₹400ல் இருந்து ₹900 வரையில் விற்கப்படுகிறது.

இதேபோல், ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியில் இருந்து முலாம்பழம் வரத்து சேலம் மார்க்கெட்டிற்கு அதிகரித்துள்ளது. தினமும் 100 டன் அளவிற்கு லாரிகளில் கொண்டு வந்து இறக்குகின்றனர். இங்கிருந்து தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, துறையூர் பகுதிகளுக்கு வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இதுபோக சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல், மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி, தாரமங்கலம், சங்ககிரி பகுதியை சேர்ந்த வியாபாரிகளும் சேலம் டவுன் மார்க்கெட்டிற்கு திரண்டு வந்து முலாம்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ ₹22 முதல் ₹25 வரையில் விற்கப்படுகிறது. இது பற்றி வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் மாதுளை, ஆரஞ்ச், மாம்பழம், முலாம்பழம் வரத்து அதிகமாக இருக்கும். தற்போது மகராஷ்டிராவில் இருந்து மாதுளையும், ஆந்திராவில் இருந்து முலாம்பழமும் அதிகளவு வருகிறது. இதனை சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். விலை குறைவாக இருப்பதால், அதிகளவு வியாபாரம் நடக்கிறது,’’ என்றனர். 

Related Stories: