அடிப்படை வசதியற்ற சுரண்டை பஸ் நிலையம்

சுரண்டை, மார்ச் 19: சுரண்டை பஸ் நிலையத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அவதிப்படும் பொதுமக்கள், பள்ளி, கல்லுரி மாணவர்களின் நலன் கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். சுரண்டையில் ரூ.75 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பஸ் நிலையத்தை கடந்த 7ம் தேதி அமைச்சர் ராஜலட்சுமி திறந்துவைத்தார். இங்கு தினமும் 90க்கும் மேற்பட்ட பஸ்கள் 470 முறை பஸ் நிலையம் வந்து செல்கின்றன. சுரண்டையை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் பல்வேறு பணிநித்தம் வந்து செல்கின்றனர். குறிப்பாக சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். சுரண்டை பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் கடந்த மாதம் ஏலம் விடப்பட்டது. பஸ் நிலையம் திறந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கடைகள் திறக்கப்படவில்லை. தற்போது கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில் தாகம் தீர்க்க குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை. தமிழக அரசின் அம்மா குடிநீர்  விற்பனையும் இல்லை. இதனால் பயணிகளும், மக்களும் குடிநீருக்காக அலைய வேண்டிய அவலம் தொடர்கிறது. குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துவரும் தாய்மார்கள், ரூ.20 கொடுத்து தண்ணீர் வாங்கி பருகவேண்டியுள்ளது.

 பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ. வாட்டர் பிளான்ட் பயனில்லாமல் காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வந்துசெல்லும் இந்த பஸ் நிலையத்தில் சமூக விரோதிகள், திருடர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பஸ் நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அமர்ந்து உணவு அருந்தவும், டைம் கீப்பர் அமர்ந்து பஸ்களை கண்காணிக்கவும், அலுவலக பொருட்களை வைத்து பாதுகாக்கவும் அறை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் நடைபாதையில் டேபிள் போட்டு கண்காணித்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் ஒரே டைம் கீப்பர் மட்டும் உள்ளதால் அரசு பஸ் ஊழியர்களுக்கும்,தனியார் பஸ் ஊழியர்களுக்கும் பஸ்களை எடுப்பதில் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு 2  டைம் கீப்பர்களை பணியில் அமர்த்த வேண்டும்.கண்காணிப்பு கேமரா அமைத்து விதிமுறைகளை மீறி பஸ்களை இயக்கம் அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்படும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும்  பஸ் ஸ்டாண்டு ரோட்டில் ஒரு வழிபாதையில் வரும் பஸ்களாலும் ஒருசில வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் போலீஸ் பீட் அமைத்து போக்குவரத்தை சீராக ஒழுங்குபடுத்த  போலீசார் முன்வரவேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பாகும். இதேபோல் பஸ்கள் வருகை குறித்த கால அட்டவணையும் பஸ் நிலையத்தில் வைக்கப்படவில்லை. மேலும், மாற்றுத்திறனாளிகளை அழைத்துசெல்வதற்கான சக்கர நாற்காலி வசதியும் செய்துதரப்படவில்லை.

Related Stories: