கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

தூத்துக்குடி, மார்ச் 19: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (19ம் தேதி) தொடங்க உள்ள நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு ஏப்.18ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (19ம் தேதி) தொடங்கி 26ம் தேதி வரை நடக்கிறது. வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அதிகாரியாக கலெக்டர் சந்தீப்நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியாக மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனுதாக்கலை கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கலாம். இதுபோல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவோர் கலெக்டர் அலுவலகம் 2வது மாடியில் மாவட்ட வழங்கல் அலுலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

மேலும் விளாத்திகுளத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உதவித் தேர்தல் அதிகாரியிடமும் (தாசில்தார்) வேட்பு மனு அளிக்கலாம். விண்ணப்ப படிவங்களை தேர்தல் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

வேட்புமனு தாக்கலை முன்னிட்டு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் எஸ்பி முரளிராம்பா உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருவோர் தங்களுடன் 4 பேரை அழைத்து வரவேண்டும், 3 வாகனங்களுக்கு மேல் வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டள்ளது. நேற்றே கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், சுயேட்சைகளும் வேட்புமனுக்களை பெற்றுசென்றனர்.

Related Stories: