கலெக்டர் அலுவலகத்தில் மக்களவை தேர்தல் மனு தாக்கல் இன்று துவக்கம் விதிமீறல்களை தடுக்க 20 கண்காணிப்பு கேமரா வேட்பாளர், 4 பேருக்கு மட்டும் அனுமதி

திருச்சி, மார்ச் 19: மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குவதையொட்டி திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அத்துமீறல்களை கண்காணிக்க திருச்சி மக்களவை தேர்தல் நடத்தும் அலுவலகமான கலெக்டர் அலுவலகத்தில் 20 கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 மற்றும் புதுச்சேரியில் ஒரு மக்களவை தொகுதி உள்பட 40 மக்களவை தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும் மற்றும் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்தமாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (19ம் தேதி) தொடங்குகிறது. திருச்சி மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் இன்று காலை 11 மணிக்கு துவங்குகிறது. திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அலுவலகமான கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சி தலைவர் சிவராசுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்யவேண்டும். வேட்புமனுக்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் முழுவதும் செய்யப்பட்டு தேர்தல் அலுவலகம் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேற்று திருச்சி மாவட்ட தேர்தல் தாசில்தார் முத்துசாமி கூறியதாவது: நாளை (இன்று) முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை மனு தாக்கல் செய்யலாம். மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் மற்றும் கலெக்டர் ஆபீசில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம்.

மனு தாக்கல் செய்ய 26ம் தேதி கடைசி நாள். இதில் சனி, ஞாயிறு (23, 24ம் தேதி) விடுமுறை நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 27ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற 29ம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது. மனுதாக்கல் செய்யும் வேட்பாளர்கள் ரூ.25 ஆயிரம் டெபாசிட் தொகையை ரொக்கமாக அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ரூ.12,500 டெபாசிட் செலுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 9 உள்ளது. இந்த வேட்பாளர்களுக்கு ஒருவர் முன்மொழிந்தால் போதுமானது. சுயேட்சைகளுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும். வேட்பு மனுவுடன் புதிய வங்கி கணக்கு துவங்கியதற்கான பாஸ் புத்தகம் இணைக்க வேண்டும். வேட்பாளர் காரை தவிர மேலும் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இதேபோல் வேட்பாளரை தவிர மேலும் 4 பேர் மனு தாக்கல் செய்யும் அறைக்குள் வரலாம். தேர்தல் அலுவலகத்திலிருந்து 100 மீ. தூரத்தில் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது. அந்த கோட்டை தாண்டி அனுமதிக்கப்பட்டவர்களை தவிர யாரும் வரக்கூடாது. வேட்புமனு தாக்கலின்போது அரசியல் கட்சியினர் வருகை அதிகரிக்கும் என்பதால் அத்து மீறல்களை தடுக்கவும், தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கவும் தேர்தல் அலுவலர் அறை முன், அனைத்து தளங்கள், வராண்டாக்கள், கலெக்டர் அலுவலக முகப்பு என முக்கிய இடங்களில் 20 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 5 பேர் விண்ணப்பம்  வாங்கி சென்னர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இலவச விண்ணப்பங்களை நேற்று 5 பேர் வாங்கி சென்றனர். அதில் அகில இந்திய மக்கள் கழகம் சுப்ரமணி, அஇமுலீ சாதிக்பாட்சா, இந்திய கிறிஸ்தவர் முன்னணி டாக்டர் யேசுதாஸ், சுயேட்சை சதீஷ்குமார், தேசிய அருந்ததியர் கழகம் சுந்தர்ராஜ் ஆகிய 5 பேர் வேட்புமனுக்களை கலெக்டர் ஆபீசில் இருந்து வாங்கிசென்றனர்.

Related Stories: