குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்ததால் குண்டும் குழியுமாக மாறிய பிர்மன் கோயில் தெரு சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு

கும்பகோணம், மார்ச் 19: குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்ததால் குண்டும், குழியுமாக பிர்மன் கோயில் தெரு மாறிவிட்டது. இதை விரைந்து சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் அடுத்த பிர்மன் கோயில் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற கோயில்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த ெதருவில் அம்ரூத் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்தது. இதற்காக சிமென்ட் சாலை பெயர்க்கப்பட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் பள்ளம் தோண்டிய இடத்தில் எடுக்கப்பட்ட மண்ணை, நகராட்சி ஊழியர்கள் அப்படியே போட்டு சென்றுவிட்டனர். இதனால் தெரு முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

மேலும் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியபோது வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்தது. ஆனால் இந்த குழாயை 15 நாட்களாக சீரமைக்காததால் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் குழாய் உடைந்த பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் மீண்டும் உள்வாங்கி செல்கிறது. இதனால் இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்க பொதுமக்கள் சென்றபோது, போதுமான பணியாட்கள் இல்லை, ஆட்கள் வந்தவுடன் சாலை மற்றும் குடிநீர் குழாய் சீரமைக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். எனவே பிர்மன் கோயில் தெரு சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால், போராட்டம நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: